பணமும் நாமும்..!

💵💵💵💵💵💵💵💵💵💵💵 *பணம்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்

💵💵💵💵💵💵💵💵💵💵💵

பணமே !
வீணாகச் செலவழிக்காதே
மனிதர்களை…..!

உன்னை
வைத்திருப்பவர்களை
தூங்க விடமாட்டிகிறாய்…
உன்னை
வைத்திருக்காதவர்களை
சிரிக்க விடமாட்டிகிறாய்….
உனக்கு எதற்கு
இந்தக் கெட்ட புத்தி…. ?

நல்லவர்களிடம்
நன்மை செய்கிறாய்….
கெட்டவர்களிடம்
கெட்டதைச் செய்கிறாய்…
உன்னால்
ஒரு உண்மை புரிகிறது
“பிறப்பிடம்
எதுவாக இருந்தாலும்
இருப்பிடம் தான்
இயல்பை தீர்மானிக்கிறது” என்று

கீழ் ஜாதிக்காரர்கள்
தொட்டதெல்லாம்
தீட்டு என்று சொல்பவர் கூட
உன்னை
தொட்ட போது
தீட்டு என்று
சொல்லவில்லையே ஏன்?
மனிதா இனியாவது
நீ புத்தியத் தீட்டு…..!!!

“பணம்
பத்தும் செய்யும்” என்கிறார்கள்
பத்து செய்ய வேண்டாம்
ஒன்று மட்டும் செய் !
‘கொஞ்சம் கொஞ்சமாக
சாவதுதான்
வாழ்க்கை’ என்பதை
இந்த மனிதர்கள்
உணரச் செய்…!!!

நீ
‘சில்லறையானது’ இல்லாமல்
பலரை
சில்லறை ஆக்கிவிடுகிறாய்….

அழுக்கா இருந்தாலும்
உன்னை
அசிங்கமென்று யாரும்
சொல்வார் இல்லை…..
கசங்கி இருந்தாலும்
உன்னை
அலட்சியம் செய்பவரும்
யாரும் இல்லை…

நீயும் மனைவியும் ஒன்று
இருந்தாலும் பிரச்சனை
இல்லை என்றாலும் பிரச்சனை….

பணம் என்றால்
மூடியிருக்கும் வாய்
திறந்து கொள்கிறது
கருப்பு பணம் என்றால்
திறந்திருக்கும் வாய்
மூடிக்கொள்கின்றது……

சர்க்கார் அடித்தால்
நல்ல நோட்டாகும் நீ
சாமானியன் அடித்தால்
கள்ள நோட்டாகும்
ரகசியம் தான் என்னவோ ?

“பணம் பந்தியிலே
குணம் குப்பையிலே” என்று
சொல்கிறார்கள்
பந்தியில் அமரும்போது
பணத்தை போட்டால்
சாப்பிடுவார்களா?

“பணம்
பாதாளம் வரை பாயும்” என்பது
உண்மைதான்..
பணம் வைத்திருக்கும் பலரை
அது
உயிரோடு இருக்கும்போதே
பாதாள உலகத்திற்கு
அழைத்துச் சென்றுவிடுகிறது…..

பணம் இன்றி
வாழ்க்கையில்லை
பணமே
வாழ்க்கையில்லை…!! *கவிதை ரசிகன*

💵💵💵💵💵💵💵💵💵💵💵

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *