தமிழர் மரபில் தைத்திருநாள்..!
தமிழர் மரபில் தைத் திருநாள்
தமிழர் வாழ்வியலில் தைப்பொங்கல் திருவிழா
பருவ காலத்தில் பக்குவமாக பெய்தமழைக்கும்
ஓய்வின்றி இயங்கிய ஒளி ஞாயிறுக்கும்
உழவு செய்ய உதவிய கால்நடைகளுக்கும்
உலகம் இயங்க உதவிய இயற்கைக்கும்
நன்றி கூறவே கொண்டாடுகிறோம் பொங்கல்
பொங்கல் திருநாள் அறுவடைத் திருநாளானது
பழையன கழிந்து போவது போகி
அல்லவை அழிந்து நல்லதை வரவேற்று
வைகறையில் மாக்கோலம் வாசலில் இட்டு
மாக்கோலத்தின் நடுவில் சாணிப்பிள்ளையார் வைத்து
பிள்ளையார் தலையில் பூசணிப்பூ அலங்காரமிட்டு
விடியற்காலையில் குளித்து புத்தாடை உடுத்தி
புதுப் பானையில் புத்தரிசி இட்டு
மாவிலைத் தோரணத்தோடு மஞ்சள்குலையும் சேர்த்து
பனங் கிழங்கும் பலவித காய்கறிகளும்
கனிகளும் படையலில் கலந்து வைத்து
பொங்கல் நன்கு பொங்கி வரும்போது
பொங்கலோ பொங்கல் என குலவையிட்டு
பொங்கலைத் தித்திப்புடன் கொண்டாடி மகிழ்வோம்
ஞாயிறை வணங்கி நலமுடன் வாழ்வோம்
வீரத் தமிழர்கள் கொண்டாடும் மாட்டுப்பொங்கல்
உறவினர்களைக் கண்டு உறவாடிடும் காணும்பொங்கல்
தைமகள் பிறந்தாள் தாமாகவே வழியதுபிறக்கும்.
கவிஞர் இரா.வசந்தி, ஆசிரியர், சென்னை.