இலங்கையைச் சேர்ந்த இரு வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்று புதிய சாதனை

தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டியின் சிரேஷ்ட பிரிவில் இலங்கையை சேர்ந்த இரு வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இப் போட்டிகள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், பாத்திமா ஜின்னா பூங்காவில் இடம்பெற்றது.
அந்தவகையில், 10 கிலோ மீற்றர் தூரம் கொண்ட சிரேஷ்ட ஆண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டியை 31 நிமிடங்கள், 56.38 செக்கன்களில் நிறைவு செய்து தலவாக்கொல்லையைச் சேர்ந்த இராணுவ வீரர் விக்னராஜா வக்சன் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
அதேவேளை, தலவாக்கொல்லை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான விக்னராஜா வக்சன், தான் பங்குபற்றிய முதலாவது சர்வதேச மெய்வல்லுநர் போட்டியிலேயே முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
அவர் கடந்த 6 வருடங்களாக இலங்கை இராணுவத்திற்காக தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை 8 கிலோ மீற்றர் தூரம் கொண்ட கனிஷ்ட ஆண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டியில் மாத்தளை இந்து தேசிய கல்லூரி மாணவன் சிவாகரன் துதிஹர்ஷிதன் இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
அதேவேளை, இப் போட்டியில் பங்குபற்றிய இலங்கையின் தமித் ஹேமன்த குமார 7ஆம் இடத்தையும் அபேரத்ன பண்டா 8ஆம் இடத்தையும் பெற்றனர்.
கனிஷ்ட ஆண்கள் பிரிவிலும் இலங்கை இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கான இலங்கையின் பதில் தூதுவர் ரூபன் கிறிஸ்டி நேரடியாக போட்டி நடைபெற்ற இடத்திற்கு விஜயம் செய்து வெற்றி பெற்ற இலங்கை மெய்வல்லுநர்களைப் பாராட்டி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.