பிள்ளையானுடன் கதைக்கக் கோரிய ரணிலின் கோரிக்கைக்கு CID மறுப்பு!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உடன் உரையாடுவதற்கான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி, பிள்ளையான் உடன் தொலைபேசி மூலம் உரையாட அனுமதிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தடுப்பு காவலில் உள்ள ஒருவருடன் தொலைபேசியில் உரையாடுவது சட்டவிரோதமான செயல் என அமைச்சர் குறிப்பிட்டார்.
அவ்வாறு இருக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு பிள்ளையான் சந்திப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும், அவர் பிள்ளையானின் சட்டத்தரணியாக செயற்பட்டமையால் அந்த அனுமதி வழங்கப்பட்டது என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் கீழ், 18 ஆண்டுகளின் பின்னர் கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி பிள்ளையான் கைது செய்யப்பட்டு தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.