சிரியா அவிழ்க்கப்படாத முடிச்சுகள்
சிரியாவின் சிக்கல்களில் அவிழ்க்கப்படாத இன்னொரு முடிச்சு.
சிரியாவின் உள்நாட்டுப் போர்கள் தொடங்கிய காலத்தின் முதல் பகுதியில் நாட்டின் தலைவர் பஷார் அல் ஆஸாத்தைப் பதவியிலிருந்து இறக்கிவிட்டால் நாட்டில் அமைதி வந்துவிடும் என்று பேசப்பட்டது.
சிரிய அரசின் நீண்டகால நண்பன் ரஷ்யா தனது படையை அல் ஆஸாத்துக்கு ஆதரவாக சிரியாவுக்குள் அனுப்பியதுடன் நிலைமை மாறியது.
சிரியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றித் தங்கள் இஸ்லாமிய காலிபாத்தை நிறுவியிருந்த ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர்தான் சிரியாவின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கிறவர்கள், அவர்களைத் துரத்திவிட்டால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும், என்ற புதிய கருத்து உலகம் முழுவதும் பரப்பப்பட்டது.
சிரிய அரச இராணுவம், அமெரிக்கா, ரஷ்யா, ஈரான், ஈராக், துருக்கி, ஐரோப்பிய ஒன்றியம், ஹிஸ்புல்லா இயக்கத்தினர், குர்தீஷ் பேஷ்மெர்கா இயக்கத்தினர் முக்கிய பாகமெடுத்து மேலும் பல இயக்கத்தினருடைய ஆதரவுடன் மெதுவாக ஐ.எஸ் தீவிரவாதிகளைப் பெரும்பகுதி சிரியாவிலிருந்து துரத்திவிட்டார்கள்.
சர்வதேசத்தின் முக்கிய சக்திகள் சிரியாவில் மேடையேற்றும் நாடகத்தின் புதிய காட்சி அடுத்ததாக ஆரம்பமாகியிருக்கிறது.
சிரியாவின் எல்லைக்குள் வாழும் குர்தீஷ் இயக்கமான [YPG] என்றழைக்கப்படும் குர்தீஷ் பாதுகாப்பு அமைப்பு மீது துருக்கிய இராணுவம் அப்ப்ரின் (Afrin) நகரில் தாக்குதலில் இறங்கியிருக்கிறது. சில நாட்களாகப் பொறுத்திருந்த சிரியா அதிபர் அல் ஆஸாத் தனது இராணுவத்தை குர்தீஷ் பாதுகாப்பு அமைப்புக்கு ஆதரவாகத் தனது படைகளை அதே நகருக்கு அனுப்பியிருக்கிறார்.
“குர்தீஷ் பாதுகாப்பு அமைப்புக்கு ஆதரவாக அல் ஆஸாத்தின் இராணுவம் இறங்கினால் அவர்கள் மீது துருக்கிய இராணுவம் தாக்குவது நிச்சயம்,” என்கிறார் துருக்கிய அதிபர் எர்டகான்.
துருக்கியில் தீவிரவாதிகளாகக் கருதப்படும் [PKK] என்ற குர்தீஸ்தான் தொழிலாளர் அமைப்பின் சகாக்கள்தான் குர்தீஷ் பாதுகாப்பு அமைப்பு என்று சொல்லும் துருக்கி அவர்களும் துருக்கிக்கு எதிரான தீவிரவாதிகளாக மாறும் சந்தர்ப்பம் இருப்பதால் அதை முளையிலேயே கிள்ளியெறியவேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறது.
குர்தீஷ் பாதுகாப்பு அமைப்புக்கு ஏற்கனவே அமெரிக்கா இராணுவ உதவி செய்வதுடன் அப்பகுதியில் 30 000 அமெரிக்க இராணுவத்தினரையும் இறக்கியிருக்கிறது. அல் ஆஸாத்தின் இராணுவத்துக்கு ரஷ்யாவின் இராணுவ ஆதரவுண்டு. ஈரானின் நீட்டிக்கப்பட்ட கரமான ஹிஸ்புல்லா இயக்கத்தின் பக்க பலமுண்டு.
சிரிய இராணுவமும் துருக்கியும் எதிரெதிர் அணியில் நின்று போரிடுமானால் இரண்டு நாட்டோ அங்கத்துவர்களான அமெரிக்காவும் துருக்கியும் மோதுவதைத் தவிர்க்க முடியாது. மற்றைய சிரிய விடயங்களில் எதிர்த்தரப்பில் இருக்கும் ரஷ்யாவும், அமெரிக்காவும் ஒரே அணியில் சேர்வதும் சாத்தியமாகும்.
தனது படைகளைத் துருக்கிக்கு எதிராகத் துணிவுடன் இறக்கிவிட்டிருக்கும் அல் ஆஸாத் யுத்த விளையாட்டில் மிகவும் ஆபத்தான ஒரு நகர்வைச் செய்திருக்கிறார். தனது தேவதையாக இருந்து, அப்பிராந்தியத்தில் சமாதான அமைப்பாளராகத் தன்னைக் காட்டிக்கொள்ள முற்படும் ரஷ்யாவின் மூக்குக்குள் துரும்பை நுழைத்துப் பார்க்கிறார்.
தனது நாட்டின் பல பகுதிகளை மீண்டும் கைப்பற்றிவிட்ட அல் ஆஸாத் சிரிய இராணுவத்தின் பலத்தைக் காட்டுவதற்காகவா இந்த நகர்வைச் செய்கிறார்? அல்லது ‘நான் தான் சிரியாவின் தலைவன் எனது மக்கள் மீது எவர் தாக்கினாலும் அவர்களைப் பாதுகாப்பது எனது கடமை’, என்று காட்ட விரும்புகிறாரா?
சிரியாவின் ஆட்சிபீடத்தில் இருப்பினும் நாட்டின் ஒரு சிறுபான்மையினரான அளாவி-ஷீயா மார்க்கத்தைச் சேர்ந்தவரான அல்-ஆஸாத், எப்போதுமே நாட்டின் மற்றைய சிறுபான்மையினரான கிறீஸ்தவர்கள் [ஓர்த்தடொக்ஸ் மற்றும் ஆர்மீனியர்கள்], குர்தீஷ் மக்கள், துரூஸ்களின் உரிமைகளை மதித்து அவர்களின் ஆதரவைப் பெற்றிருந்தார். நாட்டின் 72 விகிதத்தினரான சுன்னி முஸ்லீம்களின் எதிர்ப்பைச் சமாளிக்கக் குறிப்பிட்ட சிறுபான்மையினரின் உரிமைப் பாதுகாவலராக இருப்பது அல் அஸாத்துக்கு அவசியமாக இருந்தது.
சிரியாவில் வாழும் குர்தீஷ் மக்களுக்குத் தனி நாடு கொடுக்காவிட்டாலும் குறிப்பிட்ட அளவு சுய நிர்ணய உரிமையை வழங்கச் சமீபத்தில் அல்-ஆஸாத் திட்டமிட்டிருந்தார். சிரிய குர்தீஷ் மக்களிடையே அதற்கான கணிசமான ஆதரவும் இருக்கிறது.
துருக்கியில் வாழும் குர்தீஷ் மக்களிடம் இருப்பதுபோன்ற தனிநாடு கோருபவர்கள் சிரியாவில் இருப்பினும் அவர்கள் பெரும்பான்மையினரல்ல. துருக்கிய, ஈராக்கிய பிராந்தியத்தில் வாழும் குர்தீஷ் மக்கள் நீண்டகாலமாக நடாத்திவரும் தனிநாட்டுப் போராட்டக் கோரிக்கையால் எரிச்சலடைந்திருக்கும் துருக்கிய அரசு அல் ஆஸாத் தனது நாட்டுக் குர்தீஷ் மக்களுக்கு அதிக உரிமைகளை வழங்குவதை விரும்பவில்லை.
சிரியாவில் உரிமைகள் பெறும் குர்தீஷ் மக்கள் ஆதரவுடன் துருக்கிய, ஈராக்கியப் பகுதியில் வாழும் குர்தீஷ் இயக்கங்கள் துருக்கிய இராணுவத்துடன் போராடும் பலத்தைப் பெற்றுவிடும் என்று துருக்கியின் தலைவர் எர்டகான் அஞ்சுகிறார்.
அப்ரின் நகரம் உலகின் கவனத்தை முழுவதுமாக ஈர்த்திருக்கும் தருணத்தில் மீண்டும் ரஷ்ய அதிபர் புத்தின் நுழைந்து எர்டகானின் படைகள் போரில் இறங்காமல் நிறுத்த,
இன்னொரு பக்கம் ஈரான் தனது நட்பு நாடான சிரியாவையும் வேகத் தடை போட்டு நிறுத்தியது.
சகல தரப்பினரையும் புதிய கட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு புட்டின் அழைத்திருக்க துருக்கியோ தனது போர் அறைகூவலைத் தொடர்ந்தும் செய்துகொண்டிருந்தது.
ரஷ்யா ஒழுங்குசெய்திருந்த பேச்சுவார்த்தைகள் என்னாயின என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை. ஆனால், ஓரிரு நாட்களாக அப்ரின் நகரம் முழுவதுமாக வெளியுலகத் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
ஒரு வாரத்துக்கு முன்னரே நகரின் மின்சாரம், நீர் வசதிகளை அதைச் சுற்றிவளைத்திருக்கும் துருக்கிய இராணுவம் நிறுத்திவிட்டது.
“துருக்கிய இராணுவம் அப்ரின் நகருக்குச் சமாதானத்தைக் கொண்டுவரவே வந்திருக்கிறது. எங்கள் சமாதானக் கரத்தைக் குலுக்கி எங்களிடம் சரணடையுங்கள். குற்றங்களில் ஈடுபட்டவர்களை துருக்கிய நீதிமன்றம் விசாரணை செய்து நீதியுடன் நடந்துகொள்ளும். எங்களை நம்புங்கள்!” என்ற செய்தி அப்ரின் நகரத்தின் சிரிய – குர்தீஷ் மக்களுக்கு துருக்கிய இராணுவத்தால் வழங்கப்பட்டிருக்கிறது.
உலகின் பலமான சக்திகள் சகலமும் நேரடியாகவோ, மறைமுகமாகவே நகருக்குள் குவிக்கப்பட்டிருக்க எவர் சிறிய நகர்வைச் செய்தாலும் ஏற்கனவே இருக்கும் இடியப்பச் சிக்கலுக்குள் புதிய சிக்கல்கள் ஏற்படுவதைத் தடுக்க இயலாது.
சிரியாவின் அமைதி மீண்டும் பல காத தூரங்களுக்குப் போய்விட்டது!
எழுதுவது சாள்ஸ் ஜே