”கேம்பிரிட்ஜ் அனலேடிக்கா” – பிரிட்டனும் தலையை உருட்டுகிறது
“உன் எதிர்தரப்பில் இருப்பவரை விபச்சாரியிடம் மாட்டிவிட நாங்கள் உதவிசெய்வோம்!” சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உருள ஆரம்பித்த “ கேம்பிரிட்ஜ் அனலேடிக்கா ” நிறுவனத்தின் தலையை பிரிட்டனிலும் பந்தாடப்படுகிறது.
டொனால்ட் டிரம்ப்பின் தேர்தல் பிரச்சாரத்துடன் சம்பந்தப்படுத்தப்பட்ட “கேம்பிரிட்ஜ் அனலேடிக்கா” பிரிட்டனில் “பிரிக்ஸிட்” தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும்படி வாக்களிக்க வேண்டிய பகுதியினருக்கும் சேவை செய்தது பற்றி வெற்றிநடை இணையம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது.
நேற்றிரவு [19.03] பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிறுவனமான “சனல் 4” அந்த நிறுவனத்தினர் எப்படிச் செயற்படுத்துகிறார்கள், எப்படியான சேவைகளைத் தங்கள் கொடுப்பதாக வாடிக்கையாளர்களிடம் அறிமுகப்படுத்துகிறார்கள் என்பது பற்றி துகிலுரித்துக் காட்டியது.
அரசியல்வாதி பக்கம் செயல்படுவதாக அறிமுகப்படுத்திக்கொண்டு “கேம்பிரிட்ஜ் அனலேடிக்கா” நிறுவன உயர்மட்டத் தலைவர்களைச் சந்திக்கிறார் தொலைக்காட்சி நிறுவன ஆராய்வாளர்.
“உங்கள் எதிர்த்தரப்பு அரசியல் தலைவர்களை விபச்சாரிகளிடம் மாட்டிவிட்டு அதைப் படங்கள் எடுத்து வெளியிட்டு அவர்களை ஆட்டுவிக்க முடியும், பிரிட்டிஷ் உளவாளிகளாக வேலை செய்தவர்கள் எங்களிடம் இருக்கிறார்கள், அவர்கள் மூலம் உங்கள் எதிர்த்தரப்பின் இரகசியங்களை உளவுபார்க்க முடியும்,” என்று தாங்கள் மறைவாகப் படமெடுக்கப்படுவதை அறியாத “கேம்பிரிட்ஜ் அனலேடிக்கா” உயர்மட்டத் தலைவர்கள் சொல்வது வெளியாகியிருக்கிறது.
குறிப்பிட்ட தொலைக்காட்சி விபரங்களை வெளியிட்டபின் “நாங்கள் அந்த நபரிடம் சொன்னதெல்லாம் உண்மையல்ல, அந்த வாடிக்கையாளர்களின் நோக்கம் என்னவென்று அறிந்துகொள்ள அப்படிச் சொல்லி நோட்டம் விட்டோம்,” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள் “கேம்பிரிட்ஜ் அனலேடிக்கா” தலைவர்கள்.
“சனல் 4” வெளியிட்ட விபரங்களின் பின்பு இன்று “கேம்பிரிட்ஜ் அனலேடிக்கா” நிறுவனக் காரியாலயங்களை லண்டனில் பிரிட்டிஷ் நீதித்துறை இன்று சோதனையிடுகிறது.
http://www.vetrinadai.com/news/donald-trump-election-facebook-cambridge/