அகதிகளைத் துரத்தியடிக்கும் உலக அகதிகளின் நாடு

இஸ்ரேலைப் பொறுத்தவரை, பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்கும் இருக்கும் பிரச்சினைகளையே பெரும்பாலும் உலக ஊடகங்கள் கவனிப்பது வழக்கம். அதனால், ஆபிரிக்கர்களுக்கு எதிராக இஸ்ராயேலிய அரசும், சில நிறவாத இயக்கங்களும் எடுத்துவரும் நடவடிக்கைகள் அதிகம் பேரின் கவனத்தை ஈர்ப்பதில்லை எனலாம்.

இஸ்ரேல் நாடிழந்தவர்களால், புலம் பெயர்ந்தவர்களால் கட்டியெழுப்பப்பட்ட ஒரு நாடு என்பது எல்லோருக்கும் தெரியும். யூதர்கள் தமது நிலத்தை இழந்ததால் அவர்களுக்காக ஸ்தாபிக்கப்பட்ட நாடு என்று குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.

ஐரோப்பாவிலிருந்து துரத்தப்பட்ட அஸ்கனாஸி யூதர்கள், வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கிலிருந்து புலம்பெயர்ந்த மிஸ்ராஹி யூதர்கள், எத்தியோப்பியாவிலிருந்து யூத தொடர்புள்ளவர்கள் என்பதால் குடியேற்ற அனுமதிபெற்ற சுமார் 14,000 எத்தியோப்பிய யூதர்கள் இஸ்ராயேலில் வாழ்கிறார்கள்.

ஆனால், அதே இஸ்ரேல் ஆபிரிக்கா பிராந்தியத்திலிருந்து அகதிகளாக வந்தவர்களை மிகவும் மோசமாக நடாத்திவருகிறது என்பதைப் பல மனித உரிமை அமைப்புக்களும் ஐ.நா-வும் தமது அறிக்கைகளில் சுட்டிக்காட்டி வருகின்றன. சில யூத அமைப்புக்கள் ஆபிரிக்க அகதிகளைத் திட்டமிடுத் தாக்குகின்றன, மற்றும் சில கறுப்பர்களே வெளியேறுங்கள் என்று கோஷமிடுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்ரேலிய அரசு அகதிகளாக வந்த 35, 000 பேர்களை நாட்டைவிட்டு வெளியேறச் சொல்லியிருக்கிறது. 2009ம் ஆண்டுக்குப் பின்பு 10 எரித்தியர்களுகும் ஒரேயொரு சூடான் நாட்டவருக்கும் மட்டுமே இஸ்ரேல் அகதியாக நாட்டுக்குள் வாழ அனுமதி கொடுத்திருக்கிறது.

பல வகைகளிலும் ஆபிரிக்க அகதிகளுக்குப் பல வருடங்களாகத் திட்டமிட்டுத் தொல்லை கொடுத்து இஸ்ராயேல் அரசு உச்ச நீதிமன்றம் வரை சென்று வரும் 9 திகதிக்குப் பின்பு [09.04] அவர்கள் இஸ்ரேலில்  இருக்கலாகாது என்று சொல்லியிருக்கிறது.

நாட்டிலிருக்கும் அகதிகள் முகாம்களையெல்லாம் மூடிவிட்டு, தலைக்கு 3,500 டொலர்கள் கொடுத்து அகதிகளை வெளியேறச் சொல்லி, அதன்பின்பு அதற்கான திகதியையும் குறித்திருக்கும் நத்தான்யாஹு அரசு தனது நடவடிக்கைகளின் மூலம் சர்வதேச ரீதியில் இஸ்ராயேலுக்கு மேலும் கெட்ட பெயரையே வாங்கித் தரும் என்று புரிந்துகொண்டு சில இஸ்ரேல் அமைப்புக்கள் ஆபிரிக்க அகதிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன. ஆனால், அது எத்தனை உதவப்போகிறது என்பது இஸ்ராயேல் மக்கள் எகிப்திலிருந்து தாங்கள் விடுதலை பெற்றதைக் கொண்டாடும் பாஸ்கு பண்டிகை நாட்கள் முடிந்தவுடன் தெரியக்கூடும்.

எழுதுவது சாள்ஸ் ஜெ.போர்மன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *