“கதை வெளியில் போகக் கூடாது” கூட்டமைப்பு கூடிப் பேசியது என்ன?
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படும் போது கூட்டமைப்பு எடுக்க வேண்டிய நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும் என்பதற்கான கூட்டம் நீண்ட கூட்டமாக நடந்தேறியபோது பேசிய விடயங்கள் “வெளியில் கதை போகக்கூடாது” என்று அழுத்தம் கொடுக்கப்பட்டு உரையாடப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஊடகங்களுக்கு சொல்லக்கூடாது என்று அழுத்தம் கொடுக்கப்பட்ட விடயங்கள் எங்கள் ஊடகங்களுக்கு கிட்டியிருக்கிறது. அவற்றில் சில
*ரணிலை கைவிட்டு விடாதீர்கள், அவருடன் சேர்ந்து நிற்கலாம் , தமிழர் பிரச்சினையை தீர்க்கலாம் என்று சம்பந்தனுடன் கொழும்புக்கான அமெரிக்க தூதுவர் பேசியிருக்கிறாராம்.
*ரணில் ஆதரவு அவசியம் என்று இந்திய தூதுவரும் சம்பந்தனுடன் பேசியிருக்கிறாராம்.
*ரணில் அரசை குழப்ப வேண்டாம் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி சிறிலங்கா ஜனாதிபதியுடன் பேச முயற்சி எடுத்த போதும் மைத்திரி காய் வெட்டுகிறார்.
*புதுடில்லிக்கான அமெரிக்க தூதுவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சாளர் சுமந்திரனுடன் பேசியிருக்கிறாராம்.
*ரணில் பதவி விட்டு போனால் வரப்போவது கோட்டபாய.. இதுவே மைத்திரி முக்கிய திட்டம்.
*உண்மையில் மைத்திரி நடுநிலை போல நடிக்கிறார். காரணம் சர்வதேச அழுத்தமாம்
* மகிந்த- கோட்டபாய மீண்டும் வந்தால் பிறகு தெரியும் தானே என்ன நடக்கும் என்று (எச்சரிக்கை தொனி)
இவையெல்லாம் ரணிலை காப்பாற்ற பேசிய குரல்கள்.
ரணிலை எதிர்த்தவர்கள் சொன்னது சற்று வேறுபாடானது.
*ரணிலை நம்பி இறங்கி இப்ப கூட்டமைப்பு மக்கள் செல்வாக்கு இழந்து போச்சு.
*சமாதான முயற்சி என்று ஏதும் உருப்படியான விசயம் ஒன்றுமே நடக்க இல்லை.
*கூட்டமைப்பு ஈபிடிபி கைபிடித்தது என்று மக்களிடம் நேரில் போக கஷ்டமாக இருக்கிறது. பிறகு நரி ரணிலையும் காப்பாற்றினால் மக்களிடம் என்ன முகத்துடன் போவது?
* மகிந்த மட்டும் அட்டூழியம் செய்யவில்லை. ரணில் மற்றும் ஐதேக பல தடவை செய்யது மறந்து போச்சா?
*பலமான புலிகள் இயக்கத்தை பிரித்து நாடகமாடிய நரி தந்திரசாலி ரணில். தமிழர் பலத்தை நலிவடைய செய்தவரை நாங்கள் ஆதரித்து எப்படி அடுத்த தடவை மக்களிடம் போவது?
இன்னும் சில பல விடயங்கள் கிட்டியிருப்பினும் அவை வெளிப்படையில் பகிர்ந்தால் தங்கள் பெயருக்கு கூடாது என விடைபெற்ற அந்த ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஒருதடவை வந்தால் சொல்வதாக உறுதியளித்தார்கள்.
இருப்பினும் இரு தரப்பினரும் தங்கள் தரப்பு வாதங்களை சொல்லியிருந்தாலும் அங்கும் அவர்களின் எதிர்கால அரசியல் இலாப நலன் இருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.