விக்கினேஸ்வரன் களத்தில் நிற்பது உறுதியா?

நடப்பு  மாகாண சபை பதவிக்காலம் முடிவடைய இன்னும் சிலமாதங்களே  உள்ள நிலையில் முதலமைச்சர் வேட்பாளர்களாக களத்தில் நிற்கப்போவது யார் யார் என்பதற்கான பேச்சுக்கள் அடிபடத் தொடங்கிவிட்டது.

ஒருபுறம் தமிழரசுக்கட்சியின்  சம்பந்தன் சரியான நேரத்தில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என்று சொன்னாரே தவிர நடப்பு தமிழரசு கட்சியின் தெரிவான சி வி விக்னேஸ்வரன் அவர்கள் பெயரை உச்சரிக்கவேயில்லை.பொருத்தமானவர் வருவார் என்று பொதுவாக சொல்லிவிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீண்டும் விக்கினேஸ்வரனை தேர்தல் வேட்பாளராக கொண்டு வரப் போவதில்லை என உறுதியாக சொல்லுகிறார்.முதல் தடவையாக விக்கினேஸ்வரனை களத்திற்கு கொண்டுவரும் போது வந்த எதிர்ப்புகளை எதிர்த்து விடாப்பிடியாக  நின்றவர்கள் இப்போது இவர்களே “அவரின் சேவை போதுமடா” என்பது போல கருத்து வெளியிடத்தொடங்கிவிட்டார்கள்.

அதே  நேரத்தில் கூட்டமைப்பு பங்காளிக்கட்சிகளின் நிலைப்பாடுகள் என்ன என்பது குறித்து தமிழரசுக்கட்சியோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்போ தங்களுக்குள் ஆகக் குறைந்தது  ஒரு உரையாடலைத்தானும் செய்ததாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.ஆனால் பொது வெளியில் தங்கள் தனிப்பட்ட கருத்துகளை சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

இதை புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் “சுமந்திரன் சொல்வது கூட்டமைப்பின் முடிவல்ல” என்று அண்மையில் தெரிவித்திருந்தார்.ஆனால் இப்படியே சொல்லி சொல்லி விட்டு  கடந்த காலங்களைப்போலவே கூட்டமைப்பின் பங்காளிகளாகவே தம்மை நிலைப்படுத்த அரசியல் காரணங்கள் காட்டி இவர்கள் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடுகளோடு அண்டியே இருப்பார்கள்  என்பது தான்   எப்போதும் எண்ணத் தோன்றும் விடயம். இதற்கு உள்ளாட்சி சபைத்தேர்தல்களில் ரெலோவின் குத்துக்கரண மாறி மாறி எடுத்த  முடிவுகள் உட்பட பல உதாரணங்கள், இவர்களின் அரசியல் தேவையே இன்றைய கூட்டமைப்பின் தேவை போலுள்ளது.

சரி முதலமைச்சர் வேட்பாளராக சிவி விக்கினேஸ்வரன் அவர்கள் மீண்டும் வர உடன்படுவாரா அல்லது உடன்பட முடியாதபடி அரசியல் அழுத்தங்கள் இந்த பதவிக்கால நிறைவில் வீடு அனுப்பிவிடுவர்கள் என்ற எதிர்வு கூறல்களும் ஒரு புறத்தில் தொடங்கிவிட்டன.

ஆனால் நேற்று முதலமைச்சர்  சி வி விக்கினேஸ்வரன்  நேற்று இதுபற்றி வாய் திறந்திருக்கிறார்.

செல்லுமிடமெங்கும் பல தரப்பட்ட  மக்கள் வேண்டுவது தொடர்ந்து தன் பயணம் தொடர வேண்டும் என்பதுவே என்றும் மக்கள் வேண்டுதல்களும் மகேஷுவரனின் சித்தமும் கைகொடுக்கிறது என்று தன் பச்சை சமிக்ஞையை காட்டியிருக்கிறார்.

ஆனால்  தமிழரசுக்கட்சி அவரை  வீடு தேடி போய் அழைத்து  கூட்டமைப்பின் அனைத்து பங்காளிக்கட்சிகளையும் சம்மதிக்க வைத்து “முதலமைச்சர் தானாக இருக்க முடியாதா” என்று நினைத்த மாவைக்கும் ஆறுதல் பேசி   கூடி அழைத்த வந்த வேட்பாளர் தான் சி வி விக்னேஸ்வரன். மக்கள் சிலபலரும் மற்றைய கட்சிகளும் தமிழ் தேசிய நிலைப்பாடுகள் அறியாதவர் என்று  விமர்சனங்களை முன்வைத்திருந்த போதும் விடாப்பிடியாக அன்று கொண்டுவரப்பட்டவர் தான் சி வி.

ஆனால்  இன்று அவர் பச்சைக்கொடி காட்ட பொருத்தமானவர் வருவார் என்கிறது தமிழரசுக்கட்சியின் உயர்மட்டம்.

அதை சி வி தமிழரசுக் கட்சியிலிருந்து வேட்பாளராக அழைப்பு கிடைக்கும் சாத்தியம் இல்லை என்று கோடிட்டு சொல்லியிருக்கிறார்.என்றாலும் மக்கள் நன்மை கருதுவதால் கொள்கை ரீதியாக உடன்பாடும் கட்சிகளோடு இணைந்து போட்டியிடுவதாக உத்தேசிப்பதாகச் சொல்கிறார்.தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சர்வாதிகாரப் போக்குகள் என்று பல தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் குறித்து கோடிடும் சி வி மக்கள் நலன் கருதி தேர்தலில் இன்னொரு கூட்டணியாக நிற்கலாமா என்பது குறித்து சிந்திப்பதையும்  வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒட்டு மொத்தத்தில் சி வி மாற்று கூட்டமைப்பில்  என்றாலும் தன் அரசியல் எதிர்காலத்தை கொண்டு செல்வதற்கான உத்தேசப் பாதைக்கு பச்சைசமிக்ஞையை காட்டியிருப்பது தேர்தல் களத்தில் நிற்பாரா என்பது போன்ற கேள்விகளுக்கு  பதிலிறுக்கப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.

http://www.vetrinadai.com/news/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%af%81%e0%ae%b5-%e0%ae%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *