காஸ்ட்ரோ குடும்பம் தலைமை தாங்காத கியூபா?
1959 இல் கியூபாவின் சர்வாதிகாரியை கெரில்லாப் போரின் மூலம் ஒழித்துக்கட்டிய பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் உருவகமாக சர்வதேசத்துக்கு மாறினார் என்றார் அது மிகையாகாது. கம்யூனிசவாதியான காஸ்ட்ரோ பல சமூகப் பிரச்சினைகளாலும் சிதறிப்போயிருந்த நட்டை ஒன்றுபடுத்தி மெதுவாக ஒரு நவீன குடியரசாக்கினார். சர்வதேச அளவில் சமூகத்தின் சகல தரப்பினருக்கும் கல்வி, ஆரோக்கியம் போன்றவைக்கு முன்னுரிமை கொடுக்கும் நாடாக மிளிர்ந்தது கியூபா.
அதேசமயம் கியூபா ஒரு மூடப்பட்ட நாடாகவும் ஆகியது. காஸ்ட்ரோவும் அவரது கட்டுப்பாட்டில் இருந்த கம்யூனிசக் கட்சியும் மட்டும்தான் நாட்டின் அனுமதிக்கப்பட்ட அரசியல் இயக்கங்களாக ஆக்கப்பட்டன. ஒருகட்சிச் சர்வாதிகார நாடாக இருக்கும் கியூபாவில் பிடலும் அவரது சகோதரர்களும், அவர்களது குடும்பங்களும் முக்கிய அதிகாரங்களைக் கைப்பற்றிக்கொண்டார்கள். ஏறக்குறைய உயிர் போகும்வரை நாட்டின் ஜனாதிபதியாக இருந்த பிடல் பதவியிலிருந்து விலகியதும் அவரது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ நாட்டின் ஜனாதிபதியானார். பிடல் 2016 இல் மரணமானார்.
பிடலின் அடிச்சுவடுகளில் நாட்டை நடாத்திய, இப்போது 86 வயதாகிய ராவுல், தான் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார், ஆனால் கட்சியின் தலைவராக அவர் மேலும் 3 வருடங்கள் இருப்பார். நடக்கவிருக்கும் கட்சி மாநாட்டில் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு முதல் தடவையாக காஸ்ட்ரோ குடும்பத்திலில்லாத ஒருவர் பதவிக்கு வரலாம் அவர் பெயர் மிகுவேல் டியஸ்-கனல் என்ற செய்திகள் ஊடகங்களில் கசிய அனுமதிக்கப்பட்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் அடிமட்டத்திலிருந்து வளர்ந்த 57 வயதான மிகுவேல் நாட்டின் கல்வியமைச்சராக இருந்தவர். இவரது வழி “பாரம்பரியத்தின் தொடர்பாகவே” இருக்கும் என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது சர்வதேச ரீதியில் எழுப்பப்படும் கேள்வியான “கியூபா தனது கம்யூனிசக் கோட்பாட்டைக் கைவிடுமா?” என்ற கேள்விக்குப் பதில் “இல்லை” என்பதாகவே இருக்கும் என்று பலரும் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
நாட்டின் இரகசியப் பொலீஸ் துறை ராவுலின் ஒரு மகனின் கீழே இயங்குகிறது. நாட்டின் இராணுவத்தின் கீழே இயங்கும் வெளிநாட்டுச் செலாவணியைக் கையாளும் துறையை ராவுலின் மருமகன் இயக்குகிறார். ராவுலின் இன்னொரு மகன் நாட்டின் அரசியல்வாதிகளுக்கான பாதுகாப்பு அதிகாரிகளைத் தெரிந்தெடுப்பவராக இருக்கிறார். எனவே மிகுவேல் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டாலும் காஸ்ட்ரோ குடும்பத்தினர்தான் நாட்டின் முக்கியமான அதிகார மையங்கள் என்ற சிலந்திவலையில் அவர் கட்டுப்பட்டே இருப்பார்.
ஒருவேளை புதிய தலைமுறையில் ஒருவராகப் பதவியேற்கப்போகும் மிகுவேல் சில வருடங்களுக்கு நாட்டைக் கையாளப்போகும் இடைக்காலத் தீர்வாகவும் இருக்கலாம். காஸ்ட்ரோ குடும்பத்திலிருந்து இன்னொருவர் நாட்டின் தலைமையைத் தாங்கும் அரசியல் முதிர்ச்சியை அடையும்போது மிகுவேல் பதவியிலிருந்து விலகக்கூடும்.
சார்ள்ஸ் ஜெ.போர்மன்