ருமேனியத் தூதுவராலயம் ஜெருசலேமுக்கு மாறுமா?
தெல்அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு இஸ்ராயேலிலிருக்கும் ருமேனியத் தூதுவராலயத்தை மாற்றுவது பற்றி நாட்டின் பிரதமர் வியோரிகா டன்ஸிலா அறிவித்தால் ஒரு அரசியல் சிக்கல் உண்டாகி மோசமாகிக்கொண்டு வருகிறது.
“வியோரிகா டன்ஸிலாவால் ருமேனியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் சிக்கல்கள் உண்டாகியிருக்கின்றன. அவை ருமேனியாவுக்குப் பாதகமாகின்றன. எனவே அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டும்,” என்று பகிரங்கமாக நாட்டின் ஜனாதிபதி கிளௌஸ் யோஹான்னிஸ் அறிவித்திருக்கிறார். பிரதமரை அவர் தனது காரியாலயத்தில் வந்து சந்திக்கச் சொன்னதைப் பிரதமர் ஏற்கவில்லை.
இஸ்ராயேலுக்குச் செல்வதற்கு முன்பு தனக்கு அறிவிக்காமல் போனதாகவும், அங்கு சென்று தூதுவராலய மாற்றத்தைப் பற்றி அறிவிக்கமுன்பு அதைத் தனக்குத் தெரிவிக்கவும் இல்லை என்று குற்றஞ்சாட்டுகிறார் ஜனாதிபதி.
ருமேனியா ஜெருசலேமுக்குத் தனது தூதுவராலயத்தை மாற்றுமானால் அப்படிச் செய்யும் முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடாக இருக்கும். அது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடைய வெளிவிவகாரக் கோட்பாடுகள் முக்கியமான சர்வதேச விவகாரங்களில் ஒரே பாதையில் இருக்கவேண்டும் என்ற குறிக்கோளுக்கு எதிராகவும் இருக்கும்.