காஸா போராட்டம், வாரம் ஐந்து.
ஐந்தாவது வாரமாக காஸா – இஸ்ராயேல் எல்லையில் “எங்கள் சொந்த நிலத்துக்குத் திரும்ப எங்களை அனுமதி,” என்ற கோஷத்துடன் பலஸ்தீனர்கள் போராடுகிறார்கள். அவர்கள் அவ்வெல்லையிலேயே கூடாரங்களை அமைத்து அங்கேயே உணவைச் சமைத்து, சாப்பிட்டு, உறங்கி எழுந்து கொண்டிருக்கிறார்கள்.
வெள்ளிக்கிழமைகளில் அவர்களுடைய போராட்டம் உச்ச நிலை அடைகிறது. அந்த நாட்களில் எல்லையில் டயர்களை எரித்துக் கறுப்புப் புகையால் இஸ்ராயேல் எல்லைக் காவலர்களின் கண்களில் தெரியாதபடி நின்றுகொண்டு அவர்களுக்குக் கல்லெறிகிறார்கள் இளவயதினர்.
பலஸ்தீனப் பத்திரிகையாளர் ஒருவரால் சமூக வலைத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைதிப் போராட்டம் இப்போது ஹமாஸ் இயக்கத்தினரால் இயக்கப்படுகிறது. வேலைகளோ, கல்விக்கூடங்களோ இல்லாததால் எதிர்காலம் என்ற ஒன்றையே நினைக்க முடியாத பலஸ்தீன இளைஞர்கள் ஹமாஸின் தூண்டுதலுக்கு இணங்கி இஸ்ரேலிய எல்லைக்காவலர்களைக் குறிவைக்கிறார்கள்.
இந்த ஐந்து வார காலத்தில் 45 பலஸ்தீனர்களின் உயிரைக் குடித்திருக்கும் இப்போராட்டத்தில் காயப்பட்டவர்கள் சுமார் 6000 பேர் என்கிறது பலஸ்தீன அதிகாரம். 27ம் திகதி வெள்ளியன்று 3 பேர் இஸ்ராயேல் இராணுவத்தினரால் சுடப்பட்டு இறக்க 950 பேர் காயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஐ.நா-வின் காரியதரிசி பலஸ்தீனர்களைத் தீவிரவாத நடவடிக்கைகளில் இறங்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்ள ஐ.நா-வின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் “அளவுக்கதிகமான பலத்தைப் பாவிக்காதீர்கள்,” என்று இஸ்ராயேலர்களைக் கேட்டுக்கொள்கிறார்.