மலேசியாவில் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளுக்குத் தடை
மலேசியாவில் சில வாரங்களுக்கு முன்பு “செய்திகளைத் திரிபுபடுத்திப்” பரப்புகிறவர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட சட்டம் தனது முதலாவது பலியை எடுத்தது.
மலேசியாவுக்கு சுற்றுலா வந்திருந்த யேமனைச் சேர்ந்த டென்மார்க்கில் வசிக்கும் சாலெ சலெம் சாலெ சுலைமான் என்ற 46 வயதானவருக்குப் பத்து நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர் யுடியூப் படத் துணுக்கொன்றில் சமீபத்தில் மலேசியாவில், கோலாலம்பூரில் கொலை செய்யப்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டவுடன் வேண்டுமென்றே நாட்டின் அவசர உதவி மருத்துவ சேவையினர் காலம் தாழ்த்தி வந்தனர் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
மலேசிய அதிகாரிகள் அக்குற்றச்சாட்டை மிகவும் தெளிவாக மறுத்துச் சாட்சியளித்தனர். “நான் மலேசியாவின் சட்டங்கள் பற்றித் தெரியாமல் செய்துவிட்டேன்,” என்று நடுங்கிக்கொண்டே நீதிமன்றத்தில் சொன்னார் சாலெ சலெம் சாலெ சுலைமான்.
தனக்கு மூன்று மனைவிகளும் ஆறு பிள்ளைகளும் உள்ளதாகக் கூறிய சாலெ சலெம் சாலெ சுலைமான் சிறைத்தண்டனையுடன் கொடுக்கப்பட்ட தண்டத்தையும் செலுத்தாத பட்சத்தில் மேலும் ஒரு மாதம் சிறையில் இருக்கவேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார்.
மலேசிய அரசால் கொண்டுவரப்பட்டிருக்கும் திரிபுபடுத்தப்பட்ட செய்தித் தடைச் சட்டம் நாட்டின் ஆளும்கட்சி தனது எதிர்க்கருத்துள்ளவர்களின் வாயை மூடவே பயன்படுத்தவிருக்கின்றது என்று பல மனித உரிமை அமைப்புக்களும் தமது கவலையைத் தெரிவிக்கின்றன. 09.05 அன்று மலேசியாவில் பொதுத்தேர்தல் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.