மாஜி நைஜீரிய ஜனாதிபதியின் லஞ்ச ஊழல்கள்
நைஜீரியாவின் மாஜி ஜனாதிபதி குட்லக் ஜோனதனின் மனைவிக்குச் சொந்தமான இரண்டு சொத்துக்களை பறிமுதல் செய்ய நாட்டின் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஜோனதனின் மனைவியான பேஷன்ஸ் ஜோனதன் மீது அவரது கணவர் பதவியிலிருக்கும்போது செய்ததாகக் குறிப்பிடப்படும் பல வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன.
பிரிட்டனின் சர்வதேச முன்னேற்றத் திணைக்களத்தின் கணிப்பீட்டின்படி ஜோனதனின் ஆட்சிக்காலத்தில் சுமார் 32 பில்லியன் டொலர்களை நைஜீரிய ஆட்சியாளர்கள் சுருட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
தற்போதைய ஜனாதிபதி பதவியேற்றதிலிருந்து லஞ்ச ஊழல்களாலான பணம், சொத்து ஆகியவை பற்றிய பேஷன்ஸ் ஜோனதன் மீது மட்டுமன்றி குட்லக் ஜோனதனின் நெருங்கியவர்கள் பலர் மீது வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. எதிர்க்கட்சியான ஜோனதனின் கட்சி ஜனாதிபதி புஹாரி தங்கள் மீது பழிவாங்கிவருவதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
ஜோனதனின் காலத்தில் பல வருடங்கள் எண்ணெய் வள அமைச்சராக இருந்த டிசானி அலிசன்- மெடூகே மீதும் பல வழக்குகள் போடப்பட்டு பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.