லெபனானில் பாராளுமன்றத் தேர்தல்
ஒன்பது வருடங்களுக்குப் பின்பு முதல் முறையாக லெபனானில் தேர்தல் நடக்கிறது. சவூதி அரேபியாவின் நண்பர்கள் ஒருபக்கம் ஈரானின் நண்பர்கள் இன்னொரு பக்கம் போட்டியிடும் தேர்தலில் முதல் தடவையாக வெளிநாடுகளில் வசிக்கும் லெபனானைச் சேர்ந்தவர்களும் வாக்களிக்கிறார்கள்.
1943 இல் சுதந்திர நாடாகிய காலம் முதல் லெபனான் அரசியல் அதனைச் சுற்றிவர இருக்கும் நாடுகள் தங்கள் பலத்தை ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்ளும் மைதானமாகவே இருக்கிறது.
நிஜமான வேலையில்லாத் திண்டாட்டம் 40 விகிதமாக இருக்க 25 விகிதம் என்று அதிகாரபூர்வமாகக் காட்டும் லெபனான் மிகப்பெருமளவில் சிரியாவின் அகதிகளைத் தனது எல்லைக்குள் அனுமதித்ததால் மிகப்பெரும் நெருக்கடியில் இருக்கும் நாடு. 2009 ம் ஆண்டுக்கு பதவிக்கு வந்த அரசு இதுவரை பாராளுமன்றத்தில் கொண்டுவந்த சட்டங்களில் 9 விகிதமானவை மட்டுமே கல்வி, ஆரோக்கியம், புதிய வேலைவாய்ப்புக்கள், மின்சாரவசதி, நீர்வசதி போன்றவற்றை மேம்படுத்துவையாக இருக்கின்றன. அதைத் தவிர்ந்தவற்றில் பெரும்பாலானவை நாட்டின் பாதுகாப்பு, பக்கத்திலுள்ள நாட்டுடனான உறவுகள் போன்றவற்றையே முக்கியப்படுத்துபவை.
லஞ்ச ஊழல்கள் மிகவும் வளர்ந்திருக்கும் நாடான லெபனானில் தமது சமூகம், சமயம் போன்றவற்றுக்கு வாக்களிப்பவர்களே பெரும்பாலானவர்கள். கடந்த தேர்தலில் வெறும் 55 விகிதமான வாக்காளர்களே வாக்களித்தார்கள். இந்த 9 வருட காலகட்டத்தில் வாக்காளர்கள் தொகை அதிகரித்திருப்பினும் பெரும்பாலானோருக்கு வாக்களிப்பதில் ஆர்வமே இல்லை என்ற நிலையே காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 1000 வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலில் புதிய தேர்தல் சட்டங்களின் பின்பு முதல் தடவையாக அதிக பெண் வேட்பாளர்கள் தங்களைப் பதிவுசெய்திருப்பினும் வாக்களிப்பவர்கள் ஏற்கனவே தமக்குத் தெரிந்த வயதான, பழைய ஆண் வாட்காளர்களுக்கே வாக்களிப்பார்கள் என்கிறது கணிப்பீடுகள்.
ஈரானின் பின்பலமுள்ள ஹிஸ்புல்லா இயக்கம்தான் லெபனானின் பலமான அரசியல் கட்சியாக இயங்கிவருகிறது. அதன் எதிர்ப்பக்கத்தில் “எதிர்காலக் கனவு,” என்ற பெயரில் தற்போதைய பிரதமர் சாட் ஹரீரியின் அமைப்புப் போட்டியிடுகிறது. இரண்டு பக்கங்களின் உள்ளேயும் வெவ்வேறு சிறிய அமைப்புக்களும் அணிகள் அமைத்திருப்பதால், பல எதிரிகளும் சேர்ந்த அணிகள் இரண்டு பக்கத்திலும் இருக்கின்றன.