என்ன நடக்கிறது உலகில்……
பெரும்பாலானவர்களால் எதிர்பார்க்கப்பட்டது போலவே டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் அணுத் தொழில் நுட்ப ஆராய்ச்சிகள் பற்றி ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜேர்மனி அமெரிக்கா ஆகிய நாடுகள் 2015 இல் செய்துகொண்ட ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக டொனால்ட் டிரம்ப் [08.05]அறிவித்தார். அந்த முடிவை டிரம்ப் எடுக்கப்போகிறார் என்பது தெரிந்திருந்தாலும் பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு அது முகத்திலறைந்தது போலவே இருந்தது.
ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரூஹானியும் அம்முடிவை விரும்பாவிட்டாலும், நடக்கப்போவதை ஏற்கனவே அறிந்து “டிரம்ப் எங்களை எதுவும் செய்யமுடியாது, எங்கள் அணுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையங்களை அணு ஆயுத ஆராய்ச்சிகளில் இறங்குவதற்கான முன்னேற்பாட்டுடன் இருக்க உத்தரவு கொடுத்திருக்கிறேன்,” என்று சவால் விட்டுக்கொண்டிருந்தார். டிரம்ப்பின் முடிவு அறிவிக்கப்பட்டதும் “நாங்கள் அமெரிக்காவை மட்டுமல்ல அவ்வொப்பந்தத்தில் நீடித்திருக்க விரும்பு ஐரோப்பாவையும் நம்பலாகாது,” என்று அறிக்கை விட்டார்.
ரூஹானியின் உள் நாட்டு அரசியல் எதிரிகளைப் பொறுத்தவரை அம்முடிவு அவரது ருசியான அல்வா கிடைத்தது போலாகிவிட்டது. காரணம் ஒபாமா அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடாது என்று டிரம்ப் சாடுவதுபோலவே ரூஹானி அமெரிக்கர்களுக்குப் பயந்து ஈரானின் அணு ஆயுத உற்பத்திக்கான வளர்ச்சியை மழுங்கடித்துவிட்டார் என்று ரூஹானியின் எதிர் அணியினர் ஈரானில் குரலெழுப்பிக்கொண்டிருந்தனர். தற்போது அவ்வொப்பந்தத்தை அமெரிக்காவே குப்பையில் போட்டவுடன் “அப்பவே சொன்னேனே, கேட்டியா?” தன்மையில் ரூஹானியின் எதிரணியினரான இஸ்லாமியப் பழமைவாதிகள் ஜனாதிபதியின் அணியினரைச் சாட ஆரம்பித்துவிட்டார்கள்.
பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ் நாடுகளுடன் சமீப காலத்தில் ஈரான் பல பில்லியன் டாலர்கள் பெறுமதியான கொள்வனவு ஒப்பந்தங்களைச் செய்திருந்தது. “ஈரானுடன் தொடர்ந்தும் வர்த்தகப் பரிமாற்றங்கள் செய்துகொள்ளும் நிறுவனங்கள் அவற்றை ஆறு மாதங்களுக்குள் நிறுத்தாமல் விட்டால் அவர்களை அமெரிக்கா தண்டிக்கும்,” என்ற டிரம்பின் எச்சரிக்கையால் திணறிப்போயிருக்கிறார்கள் அந்த மூன்று நாடுகளும். அவ்வொப்பந்தங்களால் நாட்டுக்குத் தேவையான முக்கிய தொழில் நுட்பம், பாதுகாப்பு போன்ற அவசியங்களை நிறைவேற்றமுடியாமல் போகும், அத்துடன் ஈரான் தனது எண்ணெயைச் சர்வதேசச் சந்தையில் விற்கமுடியாத நிலை மீண்டும் உருவாகும்.
ஒப்பந்தக் காலத்தின் முன்பு ஈரான் தனது எண்ணெயை இரகசியமாக மலிவான விலைக்கு துருக்கி, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு விற்று வந்தது. அதன்மூலம் அதிக இலாபம் அடைந்தவர்கள் இடைத்தரகர் நாடுகளே. அந்த நிலைமையை ஈரான் மீண்டும் எதிர்நோக்க விரும்பவில்லை.
ஐரோப்பிய நாடுகளுக்கு அதைத் தவிர இன்னுமொரு பிரச்சினையும் உண்டு அமெரிக்காவுடன். அது சுமார் ஐந்து வாரங்களுக்கு முதல் டிரம்ப் அறிவித்த அமெரிக்கா இறக்குமதி செய்யும் இரும்புப் பொருட்களின் மீதான வரிகளாகும். பல இரும்புப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஐரோப்பிய நாடுகளின் பொருட்கள் அந்த 25 விகித வரிகளால் பாதிக்கப்படும். ஏனெனின் அமெரிக்க நிறுவனங்கள் வெளியிலிருந்து வரும் இரும்பின் விலை அதிகமாவதால் முடிந்தவரை உள்நாட்டு இரும்பையே பாவிக்க முற்படுவார்கள். அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக தேவை ஏற்படுவதற்காகத்தான் அந்த நடவடிக்கையை எடுத்ததாக டிரம்ப் அறிவித்தாலும் அதன் முக்கிய காரணம் ஜேர்மனியுடன் அமெரிக்காவுக்கு இருந்த வர்த்தகப் பரிமாற்றத்தில் ஜேர்மனியின் வர்த்தகம் அதிகமாக இருந்ததைத் தடுக்கவே ஆகும். அறிவித்த வரிகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளை மட்டும் தற்காலிகமாகத் தவிர்த்துவிட்டு ஜேர்மனி தனது உள் நாட்டுச் சந்தையை அமெரிக்கப் பொருட்களுக்காக மேலும் திறந்துவிடவேண்டும் என்ற கோரிக்கையில் பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. அந்தத் தற்காலிக விலக்கை அமெரிக்கா எப்போதும் நிறுத்திவிடலாம் என்ற வாள் ஐரோப்பிய நாடுகளின் தலைகளின் மீது தொங்கிக்கொண்டிருக்கின்றது.
எனவே ஈரானுடனான ஒப்பந்த – முறிப்பு ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களுக்கு மிகப்பெரும் பிரச்சினையை உண்டாக்கியிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளை மட்டும் நம்பித் தாம் அவ்வொப்பந்தத்தில் தொடர முடியாது என்று ஈரான் புரிந்து கொண்டிருக்கிறது. எனினும் ஒப்பந்தத்தைத் தொடரவேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் அறிவித்துக்கொண்டிருக்கின்றன. டிரம்பின் நகர்வின் அர்த்தம்
ஐரோப்பியத் தலைவர்களை நெருக்கடிக்கு உண்டாக்கி அவர்கள் மூலம் ஈரானின் ஒப்பந்தத்தில், அமெரிக்காவுக்குச் சாதகமான மேலும் சில வரிகளைச் சேர்த்துக்கொள்ளச் செய்வதற்காகவும் இருக்கலாம். அவைகளில் முக்கியமானது மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஈரான் தனது கையைப் பலப்படுத்திக்கொள்ளாமல் இருப்பதற்கான உறுதிகளைப் பெறுவதாக இருக்கலாம். அப்படியொரு ஒப்பந்தம் சிரியாவில் அமெரிக்கா நேரடியாக ரஷ்யர்களுடன் இழுபறிப்படாமல் தவிர்த்துக்கொள்ள உதவும்.
ஈரானுடனான ஒப்பந்தம் முறிக்கப்பட்டதில் பெரும் சந்தோசமடைந்தவர்கள் யார் என்பதைக் கவனித்தால் நான் மேலே டிரம்பின் விருப்பம் மறைமுகமாக உச்சரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
ஈரானின் பரம எதிரிகளான சவூதி அரேபியாவும், இஸ்ராயேலுமே டிரம்ப்பின் ஒப்பந்த முறிவைப் பகிரங்கமாகச் சிலாகித்து வருகிறார்கள். மத்திய கிழக்கில் ஈரான் தனது ஷீயா இஸ்லாத்தைப் பரப்பும் அரசியலில் ஈடுபடாமல் தடுக்க எதையும் செய்யத் தயாராக இருக்கும் நாடு சவூதி அரேபியா. அவர்களது சுன்னி இஸ்லாம் மார்க்க நட்பு நாடுகளும் அதையே விரும்புகின்றன.
இஸ்ராயேலைப் பொறுத்தவரை ஈரான், சிரியாவில் ஏற்பட்ட நிலைமைகளைத் தனக்கு அனுகூலமாக்கி, ரஷ்யாவின் ஆசீர்வாதத்துடன் சிரியாவுக்குள் நுழைந்து அங்கே பல இராணுவத் தளங்களை அமைத்து அங்கிருந்து சிரியாவின் எல்லையில் இருக்கும் இஸ்ராயேலைத் தாக்குவதைக் குறியாகக் கொண்டிருப்பதை ஆரம்பத்திலிருந்தே இஸ்ராயேல் எதிர்த்து வருகிறது. அதனால் ஏற்கனவே சில தடவைகள் தனது நாட்டைத் தாக்கப் பயன்படலாம் என்று சந்தேகப்படக்கூடிய ஈரானிய சிரிய இராணுவத்தளங்களை இஸ்ராயேல் தாக்கி அழித்திருக்கிறது. ஒப்பந்த முறிவை அமெரிக்கா அறிவித்த இரவிலேயே இஸ்ராயேல் மீது சிரியப் பிராந்தியத்திலிருந்து ஈரான் நடத்திய தாக்குதலை முறியடித்த இஸ்ராயேல் அடுத்த காலையிலேயே சிரியாவிலிருந்த பல ஈரானிய இராணுவத் தளங்களைத் தாக்கி ஈரானுக்குக் குறிப்பிடத்தக்க சேதத்தை விளைவித்திருக்கிறது.
எழுந்திருக்கும் அப்போர் நிலைமையைத் தவிர்க்கும்படி உலகின் முக்கிய நாடுகள் எல்லோருமே வேண்டிக்கொண்டிருக்கும் அதே நேரம் என்றுமே நடக்காத அதிசயமாக இஸ்ராயேலின் பக்கத்திற்குச் சாதகமாக பஹ்ரேனிய வெளிநாட்டமைச்சர் குரல் கொடுத்திருக்கிறார். இதன் மூலம் சரித்திரத்தில் முதல் தடவையாக யூத – இஸ்லாமிய கூட்டு அரசியல் துளிர்விட்டிருக்கிறது எனலாம்.
சிறைவைக்கப்பட்டிருந்த மூன்று அமெரிக்கர்களை வட கொரியா விடுவித்தது, டிரம்ப்பும் – வட கொரியத் தலைவரும் 12-06 அன்று சிங்கப்பூரில் சந்திக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது, 09.05 இல் நடந்த பொதுத்தேர்தலில், அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொண்ட மலேசியத் தலைவர் மஹாதிர் முஹம்மது தன் காலத்தில் தானே ஒதுக்கிவைத்த எதிர்க்கட்சிக்கார்களை ஒன்றிணைத்து மீண்டும் பதவிக்கு வந்து தோற்றுப்போன நஜீப் ரஜாக்கையும் மனைவியையும் அவர்கள் மீது சாட்டப்பட்டிருக்கும் ஊழல் குற்ற விசாரணைக்காக நாட்டை விட்டு வெளியேறாமல் தடுத்து வைத்தது, 12.05 இல் ஈராக்கில் நடக்கும் பொதுத் தேர்தல் எல்லாமே கடந்த வாரத்தில் ஈரான் ஒப்பந்த முறித்தல் என்ற அரசியல் நகர்வுக்குள் காணாமல் போய்விட்ட விடயங்களே என்றால் மிகையில்லை.