வெனிசூலாவும் ஜனாதிபதித் தேர்தலும்
20 5 ஞாயிறன்று வெனிசுவேலாவில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தல் வெறும் கண்துடைப்பாகவே இருக்கும் என்றே பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் முக்கியமானவர்களையெல்லாம் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்துவிட்டு நாட்டின் ஜனாதிபதி நிக்கலோஸ் மதூரோ அறிவித்திருக்கும் தேர்தலின் காரணம் தனது பதவியின் அதிகாரங்களை அதிகரித்துக்கொண்டு அதன் மூலம் தன்னை நிலையான ஒரு சர்வாதிகாரியாகிக் கொள்வதே என்று பலரும் சந்தேகப்படுகிறார்கள்.
அதேசமயம் மதுரோவின் ஆட்சியை ஒழித்துக் கட்டவேண்டும் என்ற குறிக்கோளை எதிர்க் கட்சிகள் கொண்டிருந்தாலும் தங்களுக்குள் ஒற்றுமையாக இல்லை. ஒரே அணியில் இல்லாத அவர்களில் ஒரு பகுதியினர் மதுரோவின் ஆட்சியில் பெரும் அதிருப்தியுடன் இருக்கும் மக்களைத் தேர்தலைப் புறக்கணிக்கச் சொல்கிறார்கள். இன்னொரு பகுதியினர் ஹென்ரி பல்கொன் என்பவரை வேட்பாளரை ஆதரிக்கத் தூண்டுகிறார்கள்.
பல்கொன் உண்மையில் மதுரோவின் எதிராளியல்ல பொய்யாக உருவாக்கப்பட்ட ஒரு பிம்பமே என்ற கருத்துப் பொதுவாக நிலவுகிறது. தன் ஆட்சியில் அதிருப்தியுள்ள மக்கள் பல்கொனைத் தெரிவுசெய்தால் அவரையும் சேர்த்துக்கொண்டு ஒரு கூட்டாட்சியை மதுரோ உண்டாக்கி அதன்மூலம் தொடர்ந்தும் ஆட்சியைத் தன்னிடம் வைத்திருக்கக்கூடும் என்று பலர் ஆரூடம் கூறுகிறார்கள்.
அரச ஊழியர்களையும், தேர்தல் அதிகாரிகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து அவர்கள் ஒவ்வொருவரும் வாக்களிக்கவேண்டும் என்று இரகசியமாகக் கட்டளையிட்டிருக்கும் மதுரோவே தேர்தலில் எப்படியும் வெற்றிபெறுவார் என்ற கருத்தே தேர்தலைப் புறக்கணிப்பவர்கள் பக்கத்தில் குறிப்பிடப்படுகிறது. அப்படியாக மீண்டும் ஜனாதிபதியாகும் பட்சத்தின் மதுரோ, பக்கத்து நாடான கியூபாவைப் போன்று ஒரு ஒற்றைச் சர்வாதிகார நாட்டை உருவாக்குவார் என்று பல உலக ஊடகங்களும் கருதுகின்றன.