வெனுசுவேலாவில் மீண்டும் மதூரோ வெற்றி!
பலரும் ஆரூடம் கூறியபடியே வெனுசுவேலாவில் நடந்த பொதுத்தேர்தலில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி நிக்கொலாஸ் மதூரோ வென்றதாக நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. 48 விகிதத்தினர் வாக்களித்ததாகவும் அவற்றில் 68 விகிதமானவை மதூரோவுக்குச் சார்பாகவும் இருந்ததாகவும் அறியப்படுத்தப்படுகிறது.
தேர்தல் நாளுக்கு முன்பே வாக்காளர்கள் மீது போடப்பட்ட கண்காணிப்புக்கள், எதிர்க்கட்சி வேட்பாளர்களை ஒடுக்கியவை, மற்றும் இலவச விநியோகங்களால் தேர்தல் பிரச்சாரம் நியாயமான முறையில் நடாத்தப்படவில்லை என்று கண்காணிப்பு அமைப்புக்களாலும், சர்வதேச ரீதியிலும் குற்றஞ்சாட்டப்பட்டது. அதேபோலவே தேர்தல் நாளிலும் பல வாக்குச்சாவடிகளில் பலவித தில்லுமுல்லுகள் நடாத்தப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. தவிர, நிஜத்தில் வெறும் 30 விகித வாக்குகள் மட்டுமே போடப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
மதூரோவுக்கு எதிராகப் போட்டியிட அனுமதிக்கப்பட்ட பல்கொன் 20 விகித வாக்குகள் பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. மற்றைய எதிர்க் கட்சிகள் தேர்தலைப் புறக்கணிக்கும்படி தமது ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்டன. அவர்கள் உட்படச் சகல எதிர்க்கட்சிகளும் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கின்றன.