தேர்தல்கள் நடத்தக் கோரிப் போராடும் தாய்லாந்தர்கள்
“மீண்டும் ஜனநாயகம் வேண்டும்” என்ற தாய்லாந்தின் அரசியல் அமைப்பு நாட்டில் பேரணிகளை நடத்தி ஆட்சியில் இருக்கும் இராணுவத்தினர் ஏற்கனவே உறுதியளித்திருப்பது போல இவ்வருடக் கடைசிக்கு முன்பு பொதுத் தேர்தல் நடாத்தவேண்டும் என்று கோருகின்றன.
சுமார் 4 வருடங்களுக்கு முன்பு தாய்லாந்தில் இருந்த அரசு கவிழ்க்கப்பட்டு நாட்டின் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து மனித உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்டு ஒரு சர்வாதிகார அமைப்பே நாட்டைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
ஏற்கனவே திட்டமிடப்பட்டு செவ்வாயன்று நடாத்தப்பட்ட பேரணி ஓரளவு அமைதியாகவே நடந்தது. ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாக 14 பேர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாய்லாந்தின் மாணவர்கள் அமைப்பினாலும் நடாத்தப்பட்ட இப்பேரணியின் திட்டங்கள் பற்றி ஏற்கனவே அறிந்துகொண்ட அரசு அவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் மிரட்டியிருப்பதாகத் தெரிவ்க்கப்படுகிறது.
தேர்தல் வேண்டும் என்று கோருகிறவர்களின் பேரணியைப் பற்றி நாட்டின் பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் பிரயூத் சன் ஓ சா “பல தொழில்நுட்ப விடயங்கள், பாதுகாப்பு விடயங்கள் ஆகியவைப் பற்றிய முழு கவனிப்புக்களும் செய்யப்பட்ட பின்னரே முடிந்தால் அடுத்த வருட ஆரம்பத்தில் தேர்தல்கள் நடாத்தப்படலாம். பேரணி நடாத்திக் கூச்சல் போடுகிறவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு போன்றவை இப்படியான நடவடிக்கைகளால் பாதிக்கப்படும். நாட்டு நலனைக் கவனத்தில் கொண்டு நான் திட்டமிட்ட அட்டவணைப்படி தேர்தல்கள் நடாத்தப்படும். அது ஒருவேளை நாலைந்து மாதங்கள் தாமதப்படலாம்,” என்று கூறியிருக்கிறார்.