குறைந்த சம்பளத்தில் புதிய மலேசிய அமைச்சரவை!
மலேசியத் தேர்தலில் வெற்றி பெற்ற மஹாதிர் முகம்மது 21.05 திங்களன்று தான் உறுதியளித்தபடியே முன்பிருந்ததை விடச் சிறிய அமைச்சரவை ஒன்றை அறிவித்தார். 25 அங்கத்தினர்களைக் கொண்ட அமைச்சரவை 13 ஆகக் குறைந்திருக்கிறது.
மலேசியாவின் துணை அமைச்சர் பதவி மஹாதிர் முஹம்மது ஒரு வாரத்துக்கு முன்னர் சிறையிலிருந்து விடுவித்த அரசியல்வாதி அன்வர் இப்ராஹிமின் மனைவி டாடுக் ஸெரி வான் அஸீசாவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மஹாதிர் முஹம்மதுவின் மிக நெருங்கிய அரசியல் தோழராக இருந்து அவராலேயே ஒதுக்கிவைக்கப்பட்ட அன்வர் இப்ராஹீம் சிறையிலிருந்து வந்தபின் தான் உடனடியாக எந்த அரசியல் பதவியையும் ஏற்கப்போவதில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அவரது மனைவி டாடுக் ஸெரி வான் அஸீசா தான் மலேசியாவின் துணைப் பிரதமராகியிருக்கும் முதலாவது பெண் ஆகும்.
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பப் பல சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக உறுதி கூறியிருந்தபடியே கடந்த அரசு அறிவித்திருந்த பாரிய கட்டுமானத் திட்டங்கள் பலவற்றையும் மீள் பரிசோதனை செய்யப்போவதாகச் சொல்லியிருக்கிறார் மஹாதிர் முஹம்மது. மீள்பரிசீலனையின் பின்பு சில திட்டங்கள் தொடரலாம், மற்றும் சில முழுவதுமாக நிறுத்தப்படலாம் என்று அவர் தெரிவித்தார்.
முதல் தடவையாக அமைச்சரவை கூடிய சந்தர்ப்பத்தில் சகல அமைச்சர்களின் ஊதியங்களும் 10 விகிதத்தால் குறைக்கப்படும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.