வேகமாகக் கவிழும் துருக்கிய லிரா
துருக்கியின் நாணயமான லிரா மிகவும் வேகமாகத் தனது பெறுமதியை உலகச் சந்தையில் இழந்து வருகிறது. இன்று புதன்கிழமை மட்டுமே டொலருக்கு எதிராக 5 விகிதப் பெறுமதியை இழந்த துருக்கிய லிரா இவ்வருட ஆரம்பத்திலிருந்து 20 விகிதப் பெறுமதியால் குறைந்துவிட்டிருக்கிறது.
லிராவின் வீழ்ச்சியைக் கவனித்துக்கொண்டு வரும் பொருளாதார விற்பன்னர்கள் அடுத்தடுத்த வாரங்களிலும் அது தலா ஐந்து விகிதங்கள் பெறுமதியை இழக்கும் என்று ஆரூடம் கூறுகிறார்கள்.
அடுத்த மாதம் 7ம் திகதி துருக்கிய மத்திய வங்கி தனது அடுத்த தேசிய வட்டி விகிதத்தை அறிவிக்கும் நாள். பல பக்கங்களிலும் நெருக்கடிக்கு உண்டாக்கப்படும் துருக்கிய மத்திய வங்கியின் உயரதிகாரிகள் அவசரமாகச் சந்தித்து தேசிய வரி விகிதத்தைப் பல விகிதங்களால் உயர்த்த விரும்புகிறார்கள். அதன் மூலம் நாணய மதிப்பை ஓரளவு நிமிர்த்தலாம், பணவீக்கத்துக்கும் தடைக்கட்டுப் போடலாம். ஆனால், வட்டி விகித உயர்த்துதல் முதலீடுகளின் செலவை அதிகப்படுத்தி அதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தையும் தாக்கும். விரைவில் பொதுத் தேர்தலை அறிவித்திருக்கும் நாட்டின் ஜனாதிபதி எர்டகானோ மத்திய வங்கியைச் சுதந்திரமாகச் செயற்பட அனுமதிப்பதில்லை. தனது விருப்பப்படி தேசிய வரி விகிதத்தைக் குறைவாகவே வைத்திருக்கச் செய்கிறார் எர்டகான்.
ஆர்ஜென்ரீனா, பிரேசி, அங்கோலா, வெனிசுவேலா ஆகிய நாடுகளின் நாணயங்களுடன் போட்டிபோட்டு இவ்வருடம் தனது பெறுமதியை இழந்துவருகிறது துருக்கிய லிரா.
வெளிநாட்டுக் கடன்களிலும் முதலீடுகளிலும் பெருமளவு தங்கியிருக்கும் துருக்கிய நிறுவனங்கள் வெளிநாட்டில் வாங்கியிருக்கும் கடனின் பெறுமதி 222 பில்லியன் டொலர்கள். துருக்கிய லிராவின் பெறுமதி ஒரு விகிதத்தால் விழும்போது அக்கடன்தொகை சுமார் 5 பில்லியன் டொலர்களால் அதிகரித்து துருக்கிய நிறுவனங்களின் கடன்பழுவை மேலும் கூட்டுகிறது.