மேலுமொரு சர்வதேச ஒப்பந்தத்தில் பலஸ்தீனர்கள்
உலகில் இரசாயண ஆயுதங்களைப் பரவாமல் இருக்கத் தடுக்கும் ஐ.நா வின் ஒப்பந்தத்தில் பலஸ்தீனர்கள் [23.05] நேற்றுக் கைச்சாத்திருக்கிறார்கள்.
தனியாகப் பலஸ்தீனா என்ற நாடு உருவாகாத பட்சத்திலும் ஐ.நா வின் பொதுச் சபையில் பலஸ்தீனா ஒரு விருந்தினர் ஸ்தானத்தில் பங்கெடுத்து வருகிறது. அதன்மூலம் ஐ.நா வின் சர்வதேச ஒப்பந்தங்களில் பங்கெடுக்க இடங்கொடுக்கப்படுகிறது.
பலஸ்தீனாவை அப்படியான ஒப்பந்தங்களில் சேர்த்துக்கொண்டால் குறிப்பிட்ட ஐ.நா வின் அமைப்புக்களுக்கு அமெரிக்கா தனது பங்கு உதவித்தொகையைக் கொடுக்காது என்று அமெரிக்கா உறுதியாகச் சொல்லியிருப்பினும் ஐ.நா இந்த முடிவை எடுத்திருக்கிறது. ஏற்கனவே யுனெஸ்கோ அமைப்பில் பலஸ்தீனாவைச் சேர்த்திருப்பதால் அவ்வமைப்புக்கான உதவிகளைச் செய்வதை அமெரிக்கா நிறுத்திவிட்டிருக்கிறது. ஐ.நா வின் பலஸ்தீன அகதிகள் அமைப்புக்கும் உதவித்தொகை கொடுப்பதை அமெரிக்கா நிறுத்திவிட்டது.
இஸ்ராயேல், எகிப்து, வட கொரியா, தென் சூடான் ஆகிய நாடுகள் மட்டுமே இரசாயண ஆயுதங்கள் பரவுவதைத் தடுப்பது பற்றிய ஐ.நா வின் ஒப்பந்தத்தில் இதுவரை கைச்சாத்திடாத நாடுகள் ஆகும்.