இத்தாலிக்கு ஒரு சுத்தமான புதுப் பிரதமர்
பொதுத் தேர்தல் நடந்து இரண்டு மாதங்களாக இழுபறியில் இருந்த இத்தாலியில் புதிய பிரதமர் குசேப்பெ கொன்தெ என்ற சட்ட வல்லுனர் ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.
தனது நாட்டு மக்களுக்கான முதலாவது செய்தியில் “நான் இத்தாலியின் சகலருக்குமான வழக்கறிஞராக இருக்க விரும்புகிறேன். எங்கள் நாட்டுக்கென்று ஒரு முக்கிய இடம் ஐரோப்பாவில் இருக்கிறது,” என்று தெரிவித்திருக்கிறர் குசேப்பெ கொன்தெ.
இவரைத் தெரிந்தெடுத்த 5 நட்சத்திரக் கட்சியும், லா லீகா அணியும் ஏற்கனவே இத்தாலியில் இருந்த பிரதமர்கள் போன்று லஞ்ச ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்களாக இல்லாத ஒரு சுத்தமான அரசியல்வாதியைத் தலைவராக்கியிருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
லா லீகா அணியிலிருந்து விலகியிருக்கும் முக்கிய கட்சிகளான போர்சா இத்தாலியாவும், இத்தாலியின் சகோதர்கர்களும் தாம் பாராளுமன்றத்தில் குசேப்பெ கொன்தெக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர இருப்பதாகக் கூறுகிறார்கள். சுமார் 20 விகித ஆதரவைப் பெற்றிருக்கும் இடதுசாரிக் கட்சிகள் தாம்குசேப்பெ கொன்தெயைப் பாதுகாக்கத் தயாராக இல்லை என்கிறார்கள்.
அரசாங்கம் அமைக்கவிருக்கும் கட்சிகள் மக்களுக்குக் கொடுத்திருக்கும் வரிக்குறைப்பு, குடிமக்களுக்குச் சம்பளம் போன்ற பல திட்டங்கள் இத்தாலியின் வரவுசெலவுத் திட்டத்தில் செலவுப் பக்கத்தை மிகவும் அதிகமாக்கும் என்று கருதப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுச் செயல்படுத்திக்கொண்டிருக்கும் செலவுக்கட்டுப்பாட்டைத் தாம் மீறப்போவதாகவும் அரசாங்கம் அமைக்கவிருக்கும் கட்சிகள் பறைசாற்றுகின்றன.
அடுத்த கட்டமாக இத்தாலியின் புதிய அமைச்சரவை தெரிவு செய்யப்படவிருக்கிறது.