இத்தாலிய ஜனாதிபதியின் அதிரடி முடிவு!
இத்தாலியின் இரண்டு கட்சிகள் சேர்ந்து தெரிவுசெய்யப்பட்ட அமைச்சரவையை நாட்டின் ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாததால் மீண்டும் கறுப்பு மேகங்கள் இத்தாலிய அரசியலை மறைக்கின்றன. கட்சிகளால் பிரேரிக்கப்பட்ட கொம்தெ தன்னால் ஒரு அங்கீகரிக்கப்படக்கூடிய மந்திரிசபையை உண்டாக்க இயலாததால் தனது பிரதமர் விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்.
இதன் காரணம் ஒப்பந்தம் செய்துகொண்டு அரசாங்கத்தை அமைக்க முற்பட்ட இரண்டு கட்சிகளும் சேர்ந்து பவ்லோ சவோனா என்ற ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கும் ஒருவரைப் பொருளாதார அமைச்சராகப் பிரேரித்தது ஆகும். பொருளாதார ரீதியில் மிகப்பெரும் பின்னடைவில் இருக்கும் இத்தாலியில் ஒரு ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்புப் பொருளாதார அமைச்சர் வரலாமென்று அறிந்தவுடன் இத்தாலியின் பங்குச் சந்தை மிகவும் பாதிக்கப்பட்டது. அவரை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் இத்தாலியின் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்திவிடுவதாக அக்கடன்களைத் தம்மிடம் வைத்திருக்கும் முதலீட்டு நிறுவனங்கள் சமிக்ஞை காட்டின. அதனால் ஜனாதிபதியால் அவரை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டது.
கார்லோ கொத்தரல்லி என்ற பொருளாதார நிபுணரின் தலைமையில் ஒரு தற்காலிக அரசாங்கத்தை வெவ்வேறு துறை நிபுணர்களின் உதவியுடன் ஜனாதிபதி அமைக்க முற்படுகிறார்.
இத்தாலிய அரசியல் சரித்திரத்தில் இப்படியான ஒரு நிலைமையை இதுவரை எந்த ஜனாதிபதியும் நேரிட்டதில்லை. அரசியல் சட்டப்படி ஜனாதிபதி தான் மந்திரிசபையின் அங்கத்துவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்ற அமைப்பு இருப்பினும் எந்த ஜனாதிபதியும் இப்படியான் ஒரு முடிவை எடுத்ததில்லை என்பதால் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற ஐந்து நட்சத்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவரை அரசியல் சட்ட நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டும் என்றும் கோரியிருக்கிறார்.
ஜனாதிபதியின் தலைமையில் நிபுணர்களைக் கொண்ட ஒரு அரசாங்கம் அமைக்கப்படும் பட்சத்தில் மேலும் ஓரிரு மாதங்களில் நாட்டில் மீண்டும் பொதுத் தேர்தல் வரலாம் என்று கணிக்கப்படுகிறது.