தனது பனிச்சறுக்கல் மையங்களைத் திறப்பதைப் பின்போட்டதாக இத்தாலி அறிவித்திருக்கிறது.
இத்தாலியிலிருக்கும் அல்ப்ஸ் மலைப்பிரதேசம் வருட ஆரம்பகாலங்களில் பனிச்சறுக்கல் விளையாட்டுகளுக்கு உலகப் பிரசித்தம் வாய்ந்தவை. அவ்விளையாட்டைச் சுற்றியுள்ள பொருளாதாரமே குறிப்பிட்ட பிராந்தியங்களுக்கு முக்கிய வருமானந்தருபவையுமாகும்.
ஆனாலும் இத்தாலியில் மட்டுமன்றி அதைச் சுற்றியுள்ள ஐரோப்ப்பிய நாடுகளிலும் கொரோனாத்தொற்றுக்கள் மீண்டும் வேகமாகப் பரவிவருவதையும், உயிர்களைக் குடிப்பதையும் கண்டு அப்பிராந்தியங்கள் தங்களுடைய பனிச்சறுக்கல் மையங்களை ஏற்கனவே திட்டமிட்டது போல ஜனவரி 7 ம் திகதியன்று திறப்பதை பின்போட்டிருப்பதாக அறிவிக்கின்றன. இதையே மற்றைய ஐரோப்பிய நாடுகளும் செய்து வருகின்றன.
புதுவருடத்துக்கு அடுத்த நாளில் இத்தாலியில் 9,166 பேருக்குக் கொரோனாத்தொற்று ஏற்பட்டதாகவும், அவர்களில் 364 பேர் இறந்திருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. இத்தாலி ஐரோப்பாவிலியேயே மிக அதிகமான பேரை இப்பெரும் வியாதிக்குப் பலிகொடுத்த நாடுகளில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் ஜெ. போமன்