இரண்டாவது தடுப்பூசியை நேரத்துக்குத் தராவிட்டால் நீதிமன்றத்துக்குப் போகத் தயாராகும் கனடியர்கள்.
கனடா தனது முதலாவது Pfizer-BioNTech தடுப்பூசிகளைப் பெற்றவுடன் அவற்றை நீண்டகால முதியோர் வாழ்வு இல்லமான Maimonides இல் வாழுபவர்களுக்குக் கொடுத்தது. அந்த முதலாவது பகுதியை அவர்கள் டிசம்பர் 14 அளவில் பெற்றுக்கொண்டார்கள்.
அவர்களுக்கு முதலாவது பகுதியைக் கொடுத்தபோது அவர்கள் தமது இரண்டாவது பகுதித் தடுப்பு மருந்தை ஜனவரி 3 ம் திகதி பெற்றுக்கொள்ளலாம் என்று உறுதிகூறப்பட்டிருந்தது. ஆனால், அந்த முதியவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உறுதி தொடர்ந்தும் மீறப்பட்டு வருவதால் அவர்கள் சட்டத்தின் உதவியை நாடியிருக்கிறார்கள்.
கியூபெக் பிராந்தியத்தின் கீழ் வரும் அந்த நீண்டகால முதியோர் இல்லத்துவாசிகளுக்கான மருந்தை வரும் 72 மணித்தியாலத்துக்குள் அரசு கொடுக்காவிட்டால் அவர்கள் நீதிமன்றத்துக்குப் போவார்கள் என்று அவர்களுடைய வக்கீல் ஜூலியஸ் கிரே செவ்வாயன்று தெரிவித்திருக்கிறார்.
Maimonides முதியோர் இல்லமானது கனடாவில் பெரிதும் கொவிட் 19 தொற்றுக்களாலும், இறப்புக்களாலும் பாதிக்கப்பட்ட இடங்களில் முக்கியமானது. சுமார் 2,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு 60 பேர் இறந்துபோனார்கள். எனவே அரசு தங்களைத் தருணத்தில் கவனிக்கவில்லை என்று கோபம் அவர்களிடையே பொங்கியிருக்கிறது.
கியூபெக் மாநிலமானது புதனன்று 2,641 தொற்றுக்களையும் 47 மரணங்களையும் அறிவித்திருக்கிறது. வேகமான பரவல் காரணமாகப் புதிய இறுக்கமான கட்டுப்பாடுகளை அறிவிக்கவிருக்கிறது.
Maimonides முதியவர்களுக்கான பதில் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், கனடிய அரசு “சகல குடிமக்களுக்கும் இரண்டாவது பகுதி தடுப்பு மருந்தையும் கொடுப்பது அவசியம். ஆனால், தற்போதைய நிலையில் எங்களுக்குக் கிடைக்கும் மருந்துகளை முடிந்த அளவில் அதிகமானவர்களுக்கு விநியோக்கும் சுதந்திரமும் தேவையாக இருக்கிறது,” என்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்