இரண்டு தடுப்பூசிகளும் சமம், ஒன்றை விரும்பிக் கேட்டுப் போட முடியாது!
பிரெஞ்சு மக்கள் தங்களுக்கு எந்த வகை தடுப்பூசி வேண்டும் என்பதை தெரிவு செய்து ஏற்றிக்கொள்ள வாய்ப்பிருக்காது என்று சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் (Olivier Véran) தொலைக்காட்சி செவ்வி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருக் கிறார்.
“பாவனைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் ‘பைசர் – பயோஎன்ரெக்’ மற்றும் ‘மொடர்னா’ ஆகிய இரண்டு மெசஞ்சர் ஆர்என்ஏ (messenger RNA) தடுப்பூசிகளும் சமமான செயல்திறன் உடையவை. எது வேண்டும் என்ற கேள்விக்கு அங்கே இடமில்லை. இரண்டில் ஒன்றை ஏற்றிக்கொள்ள வேண்டும்” – என்று அமைச்சர் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் தெரிவித்தார்.
பிரான்ஸில் பொதுவாக தொற்றுக் காய்சல் மற்றும் வேறு நோய்களுக்கான தடுப்பூசிகளை நோயாளிகள் தங்களது விருப்பத் தெரிவின் மூலம் ஏற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை.அதை ஒத்த நடைமுறையே கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கும் பொருந்தும் என்று சுட்டிக் காட்டப்பட்டது.
தற்சமயம் பாவனைக்கு வந்துள்ள தடுப்பூசிகள் வைரஸின் பரம்பலைக் குறைக்குமா என்ற கேள்வி அமைச்சரிடம் எழுப்பப்பட்டது.தீவிரமான சுவாசத் தொற்று நிலையில் உள்ள ஒரு நோயாளியை அவை 95 சதவீதம் பாதுகாக்கிறன என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
ஆனால் தடுப்பூசிகள் வைரஸ் பரவலைத் தடுக்கின்றனவா என்பதை ஆரம்ப நிலையில் உலகில் எந்தவொரு நாட்டிலும் இன்னமும் எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை-என்று அமைச்சர் பதிலளித்தார்.
குமாரதாஸன். பாரிஸ்.