நோர்வேயின் தடுப்பு மருந்தும் 23 முதியவர்களின் இறப்பும்
ஜனவரி 14 வரையில் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டவர்களில் 23 பேர் அதையடுத்த நாட்களில் இறந்ததை நோர்வே ஊர்ஜிதம் செய்கிறது. அவர்களில் 13 பேரின் இறப்புக்குக் காரணம் தடுப்பூசியைப் பெற்றதை அடுத்து உண்டாகும் சளி, காய்ச்சல் போன்றவைகள் மருந்தைப் பெற்றவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் நோய்களின் தாக்குதல்களால் மோசமாகியதே என்று குறிப்பிடப்படுகிறது.
அதனையடுத்து நோர்வே வயதானவர்களுக்கான தடுப்பு மருந்து எச்சரிக்கையை “80 வயதுக்கு மேற்பட்டவர்களும், வேறு பல வியாதிகளுள்ளவர்களும் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்,” என்று மாற்றியிருக்கிறது.
நோர்வேயின் முதியோர்கள் இல்லங்களிலும், பராமரிப்பு சேவையிலும் வாரத்தில் 400 இறப்புக்கள் நிகழ்கின்றன. அவர்கள் வயது அதிகமானதாக இருப்பதும், அவர்கள் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதுமே அதற்குக் காரணமாகும். அவைகள் அந்த முதியவர்களுக்குப் பல வித ஒவ்வாமையையும் உண்டாக்கியிருக்கின்றன. எனவே அவர்களுடைய உடல்நிலையில் ஏற்படும் எந்தச் சிறிய மாற்றமும் விளைவுகளை இறப்புக்குக் கொண்டு போகலாம் என்று குறிப்பிடப்படுகிறது.
நோர்வேயில் ஏற்பட்டிருக்கும் இறப்புக்கள் பற்றி அந்த நாட்டு மருத்துவ சேவையினருடன் Pfizer-BioNTech நிறுவனம் ஆராய்ந்து வருவதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது. தடுப்பு மருந்துகள் உலகம் முழுவதும் கொடுக்கப்பட ஆரம்பித்து 2 மில்லியன் பேருக்குக் கொடுக்கப்பட்ட முதல் 10 நாட்களில் 21 பேர் மட்டுமே மிகவும் கடுமையான ஒவ்வாமை விளைவுகளால் அவதிப்பட்டார்கள் என்று குறிப்பிடுகிறது Pfizer-BioNTech நிறுவனம்.