பரிசோதனை முடியாத இந்தியத் தயாரிப்பை இந்திய மருத்துவர்களின் தலையில் கட்டுகிறார்களா?
இந்தியாவின் பதினொரு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட பாரத் பயோடெக் தயாரிப்பான கொவக்ஸீன் பல மருத்துவ சேவையாளர்களுக்கு அவர்களின் இஷ்டமின்றிக் கொடுக்கப்பட்டது. NITI ஆயோக் அங்கத்தவர் வினோத் பௌல், AIIMS, டெல்லி இயக்குனர் ரண்டேப் குலேரியா ஆகியோர் முழுவதும் பரிசோதனைகள் முடியாத கொவக்ஸீன் எடுத்து அதன் நம்பகத் தன்மையை நிரூபிக்க முயன்றும் பயனில்லாமல் போகிறது.
டெல்லி லோஹியா மருத்துவமனை மருத்துவர்களின் தலைவர் ராம் மோகன் “முழுவதும் பரிசோதனைகள் முடியாத தடுப்பூசி இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்பதால் கொவக்ஸீனை எங்கள் மருத்துவமனைச் சேவையாளர்களுக்குக் கொடுத்தார்கள். அதனால் எங்கள் பணியாளர்கள் ஓரளவு பயத்துடன் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்று நம்புகிறேன்” என்று டெல்லியின் மத்திய மருத்துவ அமைப்பின் தலைவருக்கு எழுதியிருக்கிறார். “எங்கள் மருத்துவ சேவையாளர்கள் முழுவதுமாகப் பரிசோதனைகள் முடிந்த செரும் இன்ஸ்டிடியூட்டின் கொவிஷீல்ட் தடுப்பூசியையே பெற விரும்புகிறார்கள்,” என்று அக்கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
டெல்லியில் 75 மருத்துவமனைகளுக்கு கொவிஷீல்டும் 6 அரச மருத்துவமனைகளுக்குக் கொவக்ஸீனும் அவர்களுடைய சேவையாளர்களுக்குக் கொடுப்பதற்காக அனுப்பப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டிலும் 6 அரச மருத்துவமனைகளுக்கு கொவக்ஸின் அனுப்பப்பட்டிருக்கிறது. அதை 99 மருத்துவ சேவையாளர்கள் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். மொத்தமாகத் தமிழ்நாட்டில் 2,684 பேர் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
அஸாம், மஹாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களிலும் பெரும்பாலான மருத்துவமனைகளுக்கு கொவிஷீல்டும் பத்துக்குக் குறைந்தவைகளுக்கு கொவக்ஸீனும் அனுப்பிவைக்கப்பட்டன. அந்த மாநிலங்களிலிருந்தும் கொவக்ஸீனைப் பல மருத்துவ சேவையாளர்கள் எடுக்கத் தயங்கியதாகவும் ஆனாலும் அவர்கள் அதை எடுக்கும்படி மனம் மாற்றப்பட்டதாகவும் தெரியப்படுத்தப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்