சிறுமியொருத்தியின் மரணத்தின் பின் இத்தாலி டிக் டொக்குக்கு புதிய வரையறைகளை விதிக்கிறது.
டிக் டொக்கைப் பாவித்த ஒரு 10 வயதுச் சிறுமி அதில் நடந்த போட்டியொன்றால் இறந்து போனதால் வயது நிர்ணயிக்க முடியாதவர்களை டிக் டொக் செயலியில் சேர அனுமதிக்க வேண்டாமென்று இத்தாலிய அரசு கேட்டுக்கொள்கிறது.
டிக் டொக் செயலியில் சேர்ந்துகொள்வதற்கான வயது 13 என்று அந்த நிறுவனத்தின் நிபந்தனைகள் அறிவிக்கின்றன. ஆனாலும், நிஜத்தில் அதை அந்த நிறுவனத்தால் கண்காணித்துப் பேண முடியவில்லை.
இத்தாலியின் பலர்மோ நகரைச் சேர்ந்த டிக் டொக் பாவிக்கும் பத்து வயதுச் சிறுமி மூச்சுத்திணறலால் நினைவிழந்து இறந்ததையடுத்து இத்தாலி, வயது நிர்ணயிக்க இயலாத, தமது டிக் டொக் பாவனைக்கான கட்டுப்பாடுகளை நிரூபிக்க முடியாதவர்களை அந்தச் செயலியைப் பாவிக்க பெப்ரவரி 15 வரை தடுக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறது. அதன் பின் இத்தாலி அதுபற்றிய புதிய கட்டுப்பாடுகளை டிக் டொக் நிறுவனத்துக்கு அறிவிக்கும்.
சிறுமி அந்தொனல்லா சிகொமேரோவின் உலகம் டிக் டொக், யூடியூப் படங்களெடுத்துப் பகிர்வதால் நிறைந்திருந்தது. அதில் பலர் பங்கெடுத்த பிளக்கவுட் சவாலில் அவள் பங்குபற்றினாள். கழுத்தை ஒரு பெல்ட்டால் கட்டிக்கொண்டு மூச்சை அடக்கிக்கொண்டு படமெடுப்பதுவே அந்தப் போட்டி. அதில் மூச்சுத் திணறியதை அவள் அறியாமலே இறந்துபோக அவளது தங்கையே அவளது உடலைக் கண்டுபிடித்திருக்கிறாள்.
இந்த வேதனையான சந்தர்ப்பத்திலும் அந்தொனெல்லாவின் பெற்றோர் மகளின் உடல் அங்கங்களைத் தானம் செய்து அவள் வேறு மனிதர்களிலாவது வாழட்டும் என்று நல் மனதுடன் செயற்பட்டிருக்கிறார்கள்.
“எங்கள் பாவனையாளர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அதனால் நாம் எமது கட்டுப்பாடுகள் பாவனையாளர்களால் பேணப்படுகிறதா என்பதைக் கவனித்து, அதை மென்மேலும் மேம்படுத்த இடைவிடாமல் முயற்சித்து வருகிறோம்,” என்று டிக் டொக் அறிக்கை விடுத்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்