பாரிஸில் கல்லூரி மாணவன் மோசமாகத் தாக்கப்பட்டதற்கு கண்டனங்கள்

பாரிஸில் 15 வயதான கல்லூரி மாணவன் ஒருவன் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றினால் மிக மோசமாகச் தாக்கப்பட்டுக் குற்றுயிராக விடப்பட்ட சம்பவத்துக்கு எதிரான உணர்வலைகள் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன.

உதைபந்தாட்ட வீரர் கிறிஸ்மான்(Antoine Griezmann,) நடிகர் ஒமர் சீ(Omar Sy) உட்பட பல பிரபலங்கள் மாணவனுக்கு ஆதரவாகப் பதிவுகளை வெளியிட்டதை அடுத்து இந்தச் சம்பவம் பரவலான கண்டனத்துக்கு உள்ளாகி வருகின்றது.

மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டு கடந்த சில நாட்களாக செயற்கைக் கோமா நிலையில் சிகிச்சைக்குட்படுத்தப் பட்டுவருகின்ற அந்த மாணவனின் தாயாருடன் தொடர்பு கொண்ட அதிபர் மாளிகை, அவருக்கு ஆறுதலை வெளியிட்டிருக்கிறது. பாரிஸ் நகர மேயர், உள்துறை அமைச்சர் ஆகியோரும் மிக மோசமான இந்த வன்முறையை கண்டித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.

பாரிஸ் 15 ஆவது வட்டகையில் ஈபிள் கோபுரத்துக்கு சமீபமாக உள்ள பிரபல Beaugrenelle நவீன வர்த்தக மையத்தின் அருகே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

கடந்த 15 ஆம் திகதி மாலை கல்லூரியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த ஜூறி (Yuri) என்ற டீன் ஏஜ் மாணவனையே திடீரென கம்பிகள், கத்திகளுடன் வந்த கும்பல் ஒன்று தாக்கியது. முகத்தை மூடி அடையாளத்தை மறைத்திருந்த சுமார் ஒரு டசின் இளைஞர்கள் அடங்கிய அக்கும்பல் மாணவனை தரையில் வீழ்த்திக் கண்டபடி தாக்கிப் படுகாயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றனர் என்று கூறப்படுகிறது.

உடல் முழுவதும் வெட்டுக்காயங்கள், முறிவுகளோடு தலை வெடித்த நிலையில் குற்றுயிராகக் கிடந்த மாணவன் பின்னர் அவசர உதவிப் பிரிவினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

சம்பவம் நடந்து இருவாரங்கள் கடந்துவிட்ட நிலையிலும் தாக்குதலா ளிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. சம்பவ இடத்தில் கண்காணிப்புக் கமரா ஒன்றில் பதிவானதாகக் கூறப்படும் காட்சிகள் சமூக ஊடகங்களில் கசிந்ததால் அது வைரலாகப்பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இரண்டு இளைஞர் குழுக்களுக்கு இடையிலான முரண்பாடுகளின் விளைவாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் தாக்குதலுக்கு உள்ளான மாணவனுக்கு அதில் தொடர்பு இருப்பது உறுதியாகத் தெரியவரவில்லை.

பாரிஸில் கொரோனா வைரஸ் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இளைஞர் குழுக்களது வன்முறைகள் ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றன.
——————————————————————–
குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *