சவூதி அரேபியாவுக்கு 3 மில்லியன் தடுப்பு மருந்துகளை ஸெரும் இன்ஸ்டிடியூட் வழங்கும்.

உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்துத் தயாரிப்பு நிறுவனமான ஸெரும் இன்ஸ்டிடியூட் இந்தியத் தயாரிப்பில் அஸ்ரா ஸெனகா நிறுவனத்தின் தடுப்பு மருந்துகளை 15.25 டொலர் விலையில் சவூதி அரேபியாவுக்கு 3 மில்லியன்களை அனுப்ப ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது. 

ஒப்பந்தம் செய்ததை விட 60 விகிதம் குறைந்தளவு மருந்துகளையே ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அஸ்ரா ஸெனகா கொடுப்பதாகக் குறிப்பிட்டிருப்பதால் ஐரோப்பிய ஒன்றியமும், அதன் நாடுகளும் கொதிப்படைந்திருக்கின்றன.

https://vetrinadai.com/news/astrazenaca-65-vaccine-effect/?fbclid=IwAR17HXgx7Nw2J-z2NWrLyD9WsHh1vUvWBbRYvpaSECFYEQx_CrrFQmMqAqE

அஸ்ரா ஸெனகாவின் தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்காக சுமார் 408 மில்லியன் டொலர்களைக் கொடுத்திருக்கும் ஒன்றியம் உறுதிசெய்த அளவு தடுப்பு மருந்துகளை அந்த நிறுவனம் ஒன்றியத்துக்குக் கொடுக்காததால் ஐரோப்பாவில் தயாரிக்கப்படும் தடுப்பு மருந்துகளுக்கு ஏற்றுமதித் தடை போடலாமா என்று சிந்திக்கிறது.

இச்சந்தர்ப்பத்தில் ஸெரும் இன்ஸ்டிடியூட் புதிய ஒப்பந்தங்களைச் செய்யலாமா என்ற கேள்விக்கு, “உலக நாடுகள் எவருடனும் சுதந்திரமாக ஒப்பந்தங்கள் செய்யத் தம்மால் முடியும்,” என்று ஸெரும் இன்ஸ்டிடியூட்டின் ஆதார் பூனவாலா பதிலளித்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தயாரிப்பு பெல்ஜியம் சம்பந்தப்பட்டது என்பதால் தாம் ஐரோப்பாவுக்குத் தடுப்பு மருந்து அனுப்பும் திட்டங்கள் எதுவுமில்லையென்று குறிப்பிட்டார். 

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தடுப்பு மருந்துகளை ஸெரும் இன்ஸ்டிடியூட் அனுப்பவேண்டிய நிலைமையில் அது ஏற்கனவே ஒத்துக்கொண்டபடி வறிய நாடுகளுக்கான தடுப்பு மருந்துகளை அனுப்புவதில் இடைஞ்சல் ஏற்படுமென்று தெரிகிறது. பில்-மெலிண்டா பவுண்டேஷன் மற்றும் உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு ஆகியவற்றுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் ஸெரும் இன்ஸ்டிடியூட்டுக்கு முக்கியமானதாக இருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *