காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்குச் சர்வதேச ரீதியில் பலமான ஆதரவு.
ஐம்பது உலக நாடுகளில் வாழும் 1,2 மில்லியன் மக்களிடையே ஐ.நா-வின் அமைப்பால் (UNDP) நடாத்தப்பட்ட கருத்துக்கணிப்பீட்டின்படி பெரும்பாலானோர்கள் மாறிவரும் காலநிலையைச் சீர்செய்ய நடவடிக்கைகள் எடுப்பதை ஆதரிக்கிறார்கள். அம்மாற்றங்களுக்கு ஆதரவு தெரிவித்துச் சுமார் 65 விகிதமானோர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
கணிப்பீட்டில் பங்குபற்றிய இளவயதினரிடையே பெரும்பாலானோர் காலநிலையைக் காப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது அவசரம் என்ற கருத்து இருக்கிறது. 14 – 18 வயதுள்ளவர்களில் 70 விகிதமானவர்களும், 18 – 35 இல் 65 விகிதமானவர்கள் அதைக் குறிப்பிட்டார்கள். 58 % அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களும் அப்படியே விரும்புகிறார்கள்
குறிப்பிட்ட கருத்துக் கணிப்பீட்டில் அப்படி எடுக்கத் தேவையான நடவடிக்கைகள் சிலவற்றைக் குறிப்பிட்டு அவைகளுக்கான ஆதரவு, எதிர்ப்பும் கவனிக்கப்பட்டது. பெரும்பாலானவர்கள் மேலும் தயாரிப்பைக் கூட்டுவதற்காகக் காடுகளை அழிப்பதை எதிர்க்கிறார்கள். உலகின் காலநிலைக்கு முக்கியமான மழைக்காடுகளைக் கொண்ட பிரேசிலில் 60 %, இந்தோனேசியாவில் 57 % காடுகள் அழிக்கப்படுவதை எதிர்க்கிறார்கள்.
இறைச்சி உணவைத் தவிர்த்து, தானியத்திலான உணவை அதிகரிப்பதற்கான ஆதரவு வெறும் 30 % மக்களிடம் மட்டுமே இருப்பது காணப்பட்டது.
இந்தக் கருத்துக் கணிப்பீட்டை ஐ.நா- வின் UNDP அமைப்புடன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் சேர்ந்து நடாத்தியிருந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்