எத்தியோப்பியா இனியாவது ஒற்றுமையாகுமா?
“ஆபிரிக்காவின் பிரச்சினையான மூலை” என்று குறிப்பிடப்படும் நாடுகளில் ஒன்று எத்தியோப்பியா உலகின் மிகப் புராதனமான நாடுகளில் ஒன்றாகும். ஆபிரிக்காவில் நிலப் பகுதியால் 10 வது பெரிய நாடாக இருக்கும் எத்தியோப்பியா மக்கள் தொகையை வைத்துப் பார்த்தால் ஆபிரிக்காவின் இரண்டாவது பெரிய நாடாக இருக்கிறது.
சமீப காலமாக எத்தியோப்பியா உலகின் செய்திகளில் மீண்டும் இடம்பெற ஆரம்பித்திருக்கிறது. 2017 இன் கடைசிப் பகுதியில் எத்தியோப்பியாவில் பல மாதங்களாக இருந்த அவசரகாலச் சட்டங்கள் நீக்கப்பட்டன. அதையடுத்து நாட்டின் பெரும்பான்மை இனத்தினரால் மனித அடிப்படை உரிமைகளுக்கான போராட்டங்கள் பல பாகங்களிலும் நடாத்தப்பட்டன.
போராட்டங்கள் நடக்க ஆரம்பித்த காலகட்டத்திலிருந்து நாட்டின் ஆட்சியிலிருந்த EPRDF கட்சியின் தலைமை தனது ஆட்சியில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டிய காலகட்டம் வந்துவிட்டதைப் புரிந்துகொண்டு மெதுவாக சிறு சிறு மாற்றங்களை அறிவிக்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் நாட்டின் சிறையில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் அனைவரையுமே விடுதலையும் செய்தது. ஆனால், போராட்டத்தில் இறங்கியவர்களோ “அதெல்லாம் போதாது, மாற்றம் முழுவதுமாக வேண்டும்,” என்று குரலெழுப்பினார்கள்.
கடைசியில் நாட்டின் பிரதமராக 2012 ம் ஆண்டுமுதல் பதவியிலிருந்த ஹைலெமரியம் டெஸலென் “நாட்டின் நன்மைக்காக நான் விலகுகிறேன்,” என்று அறிவித்தார். தென்னாபிரிக்காவில் விடாப்பிடியாக ஜனாதிபதியாக இருந்த ஜேக்கப் ஸுமாவை அவரது கட்சி அரசுக் கட்டிலில் இருந்து இறக்கிய நாளுக்கு அடுத்த நாள் எத்தியோப்பியாவின் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.
எத்தியோப்பியாவின் அரசியல் பிரச்சினையைப் புரிந்துகொள்ள நாம் சரித்திரத்தைப் பின்னோக்கிப் பார்ப்பதுடன் அந்த நாட்டில் வாழும் மக்களின் பின்னணிகளையும், அவர்களின் வாழ்க்கை முறைகளையும் கவனிக்கவேண்டும்.
எத்தியோப்பியாவில் ஒறோமோ [35.3%], அம்ஹாறா[26.2%], சோமாலி [6%], திகிறாய் [5.9%], சிடாமோ, குராக், வலைத்தா ஆகிய இனங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். அவர்களைத் தவிர வேறு சிறுபான்மையினரும் [17.3%] உண்டு. இவர்களில் 60 விகிதத்துக்கு அதிகமானவர்களான இன மக்களான ஒறோமோ, அம்ஹாறா ஆகியவர்கள் தான் அரசாங்கத்துக்கு எதிரான கிளர்ச்சிகளை ஓரிரு வருடங்களாக ஆரம்பித்து பிரதமரின் பதவி விலகலுக்குக் காரணமானவர்கள்.
விவசாய நாடான எத்தியோப்பியாவில் பெரும்பான்மையான விவசாயிகள் சிறு சிறு நிலத்துண்டுகளை நம்பி வாழ்பவர்கள். சொந்த நிலம் அவர்களின் அடையாளம் எனலாம். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அந்த நாட்டை ஆண்டவர்கள் தங்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களுக்கு நிலங்களைக் கொடுத்து அதன்மூலம் ஆட்சியில் இருந்து வந்தார்கள்.
ஆபிரிக்க நாடுகளிடையே பெருமதிப்புப் பெற்றவரும் எத்தியோப்பியாவின் சர்க்கரவர்த்தியாக சுமார் 44 ஆண்டுகளாக இருந்தவருமான ஹைலெ செலாஸியின் அரசு 1974 இல் கம்யூனிஸ்டுகளால் கவிழ்க்கப்பட்டது. அம்ஹாறா இனத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட அமைச்சர்களுடன் மென்கிஷ்டு ஹைலெ மரியம் நாட்டின் தலைவரானார். அவர்களது ஆட்சியில் நிலங்களெல்லாம் அரசுடைமையாக்கப்பட்டன. விவசாய நிலங்கள் பாவனைக்காக மட்டுமே விடப்பட்டன.
அந்த அரசை எதிர்த்து 1975 இலிருந்தே கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள் திகிறாய் விடுதலை இயக்கத்தினர். அக்கிளர்ச்சியின் விளைவாக 1991 இல் நாட்டின் கம்யூனிச ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாட்டின் 6 விகிதத்துக்கும் குறைவானவர்களான திகிறாய் இனத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட அரசு பதவியேற்றது. நாட்டின் அரசியலமைப்பு மாற்றியமைக்கப்பட்டு மீண்டும் நிலத்தை மக்கள் சொந்தமாக்கலாம் என்ற உரிமை கொடுக்கப்பட்டது. மீண்டும் நாட்டில் சிறு விவசாயிகள் உண்டாகினார்கள்.
அதற்கடுத்ததாக 2015 இல் அரசு புதிய சட்டத்தின் மூலம் தன் கையிலிருந்த செழிப்பான நிலங்கள் பலவற்றை வெளிநாட்டுப் பெரும் விவசாய நிறுவனங்களுக்கு விற்க ஆரம்பித்தது. அதன்மூலம் அரசுக்கு நிறைய வருமானம் உண்டாகியது, பொருளாதாரம் வளர்ந்தது. அதையடுத்து நாட்டின் மாநிலங்களின் புவியியல் அமைப்பும் மாற்றப்படும் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
புவியியல் அமைப்பு, அதாவது மாநிலங்களின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டால் அங்கு வாழும் குறிப்பிட்ட இன மக்களின் குரலும் குறிப்பிட்ட மாநில அதிகாரத்தில் வித்தியாசமடையும் என்பதால் சந்தேகமடைந்த எத்தியோப்பியாவின் பெரும்பான்மை இனத்தினரான ஒறோமோக்கள் அரசுக்கு எதிராகக் குரலெழுப்ப ஆரம்பித்தனர். மாணவர்களின் புரட்சி ஆரம்பித்து சுமார் 140 பேர் கொல்லப்பட்டனர்.
ஒறோமோக்களிடையே எதிர்ப்பு உண்டாவதைத் தவிர்க்க அரசு தனது மாநில எல்லை விஸ்தரிப்புகளில் ஒரு பகுதியைக் கிடப்பில் போடுவதாக அறிவித்தும் எதிர்ப்புக்கள் அடங்கவில்லை. மாறாக ஒறோமோ இனத்தினருடன் நாட்டின் இரண்டாவது பெரும்பான்மையினரான அம்ஹாறா இனத்தினரும் சேர்ந்துகொண்டு சிறுபான்மை அரசான திகிறாய்களின் அரசுக்கு எதிராகக் குரலெழுப்ப ஆரம்பித்தனர். நாட்டில் நிலங்களை வாங்கியிருந்த வெளிநாட்டுப் பெரு விவசாயி நிறுவனங்களைத் தாக்கினர்.
நாட்டின் மற்றக் கட்சிகளை ஒடுக்கி, பாராளுமன்றத்தின் முழு இடங்களையும் தமதாக்கி, மனித உரிமைகளை மறுத்து, அமைதியான போராட்டங்களை அடக்கியொடுக்கி, நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று, இராணுவத்தில் பெரும்பாலானவர்களை திகிறாய் இனத்தவர்களாக்கி, சகல முயற்சிகளிலும் எத்தியோப்பியாவின் ஆட்சியிலிருக்கும் EPRDF கட்சி தோற்றுப்போனது. அதன் கடைசிக் கட்டமாகத்தான் பிரதமரின் பதவியிறக்கம் கவனிக்கப்படுகிறது.
அடுத்த கட்டமாக EPRDF கட்சி அபி அஹ்மத் என்பவரைப் புதிய பிரதமராக அறிவித்தது. அக்கட்சி அமைப்புக்குள் இருக்கும் ஒறோமோ மக்களின் பிரிவைச் சேர்ந்த அபி அஹ்மத் கிறீஸ்தவ – முஸ்லீம் கலப்புத் திருமணத்தில் பிறந்தவர். உப பிரதமராக இருந்தவர். 27 வருடங்களுக்குப் பின்பு நாட்டின் பிரதமராக ஒரு ஒறோமோ இனத்தவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். பெரும்பான்மை இனத்தவராகவும், உயர்கல்வி கற்றவராகவும் இருக்கும் அபி அஹ்மத் நாட்டின் அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவருவதாக உறுதி கூறியிருக்கிறார் என்பதாலும் சர்வதேச அளவில் அவருக்கு ஆதரவு கிடைத்திருக்கிறது.
திங்களன்று 024 பதவியேற்கவிருக்கும் புதிய பிரதமருக்கு ஆதரவாக அவரது கட்சிப் பிரதிநிதிகள் 100 விகிதம் ஆதரவு கொடுத்திருந்தாலும் இனக்குழுக்களால் ஆக்கப்பட்ட அக்கட்சி பிளவுபடும் நிலையில் இருக்கிறது. அரை நூற்றாண்டுக்கும் அதிகமாகத் திட்டமிட்டுப் பிளக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இன வெறுப்புக் கொஞ்சமும் குறையவில்லை. திகிறாய் இனத்தவர்களிடையே அபி அஹ்மத் முழுவதுமாகப் புறக்கணிக்கப்படுகிறார். பொருளாதார ரீதியில் வளர்ந்தாலும் அவ்வளர்ச்சி எத்தியோப்பியர்களிடையே பிரித்துச் சமூக வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படவில்லை. வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்பந்தங்களால் கொடுக்கப்பட்ட நிலப்பிராந்தியங்களில் தமது சிறு விவசாய நிலங்களைப் பறிகொடுத்துப் புலம்பெயர்ந்த லட்சக் கணக்கானோருக்கான தீர்வுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.
இக்கட்டான இச்சமயத்தில் பதவியேற்கவிருக்கும் அபி அஹ்மத் ஆபிரிக்காவின் முக்கிய நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவின் மக்களிடையே ஒற்றுமைப் பாலத்தைக் கட்டுவாரா என்பதற்கான பதிலைக் காலம்தான் சொல்லவேண்டும்.