ரஷ்யா முன்வைத்த தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஏற்க மறுத்தது உக்ரேன்.
ஞாயிறன்று இரவு முழுவதும் பல உக்ரேன் நகரங்களின் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்தது. காலையில் அந்த நகரங்களிலிருந்து மனிதர்களை வெளியேற்ற மனிதாபிமான தற்காலிகப் போர் நிறுத்தமொன்றை ரஷ்யா பிரேரித்தது. அந்த அறிவிப்பின் காரணம் வெறும் முகப்பூச்சே என்று கூறி அந்தத் திட்டத்தை ஏற்றுகொள்ள மறுத்திருக்கிறது உக்ரேன் அரசு.
உக்ரேனின் இரண்டாவது பெரிய நகரமான தலைநகரான கியவ், சார்க்கிவ், மரியபோல், வடகிழக்கு உக்ரேன் பகுதிகள் ஆகியவற்றிலிருப்பவர்கள் தாக்குதலிலிருந்து தப்பவே தாம் தற்காலிகமாகத் தாக்குதலை நிறுத்துவதாக ரஷ்யா காலையில் அறிவித்தது. அந்த நடத்தைக்குக் காரணம் பிரான்ஸ் ஜனாதிபதியின் வேண்டுகோளே என்று ரஷ்யா குறிப்பிட்டது. ஆனால், அந்தப் போர் நிறுத்தம் உண்மையில் ஆரம்பித்ததா என்று தெரியவில்லை என்கின்றன செய்திகள்.
உக்ரேனிய ஜனாதிபதியின் சார்பில் வெளியாகிய அறிக்கை, “ரஷ்யா தான் மனிதாபிமான நடப்பதாகத் தொலைக்காட்சிப் படங்களைக் காட்டவே அப்படியான அறிவிப்பைச் செய்திருக்கிறது. ரஷ்யா பிரேரித்திருக்கும் மனிதாபிமான வழிகள் பெலாரூசுக்கும், ரஷ்யாவுக்கும் தான் செல்கின்றன. அவை எதிரிகளின் பிராந்தியங்கள்,” என்கிறது.
ஏற்கனவே இரண்டு தடவைகளுக்கும் மேல் ரஷ்யா மரியபோலிலிருந்து மக்களை வெளியேற்றப் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டதாக அறிவித்த ரஷ்யா அவற்றை மீறித் தாக்குதல்களை நடத்திக்கொண்டேயிருந்தது என்றும் உக்ரேன் ஜனாதிபதி குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்