ஆயுதங்களில் எப்போது பூக்கள் பூக்கும்?

மனிதயினத்தின் அழிவுக்கான அறிவியல் கண்டுபிடிப்பு!

மனிதமின்றியே அதனை அவரவர் கையிலெடுத்து

மனிதர்களைக் கொன்றே உயிர்களைப் பறித்திடும்

மதியற்ற மாந்தர்களின் விளையாட்டிற்கு ஆயுதங்கள்!

இரத்த ஆறுகளும் கதறிடும் கோலமும்

இதயமற்று அன்பின்றியே கொன்ற உயிர்களும்

மண்ணில் குவிந்த மலையெனவே பிணங்களும்

கண்ணில் குருதியைச் சொரியும் காட்சிகளே!

பேரரசுதான் நாமென்ற பெரியதொருக் கனவா?

போராட்டங்களும் படைகளும் அமைதியை தருமா?

வரம்பும் வரப்பும் வறட்டு மதிப்புமெனவே

வரும்போதே மனிதனவன் கொண்டு வந்தவையா?

மனிதத்திற்கு ஆயுதங்கள் துணையாக வருமா?

மாறுபட்டு அவற்றில் பூக்கள் பூக்குமா?

புற்களும் பூண்டுகளும் மிஞ்சாதே அழியும்

புவியிதனில் மனிதவுயிர்கள் எவ்வாறு வாழும்?

எழுதுவது : கவிஞர் மாலதி இராமலிங்கம், புதுச்சேரி.