“பஷார் அல்-ஆஸாத்தைக் கொலை செய்வோம்!”
சிரியாவினுள் நடக்கும் போரில் இயங்கும் ஈரானின் இராணுவத்தைப் பஷார் அல் ஆஸாத் தொடர்ந்தும் இயங்க அனுமதிப்பாரானால் தாம் அல்-ஆஸாத்தைக் கொல்லத் தயார் என்று எச்சரிக்கிறார் இஸ்ரேலின் அமைச்சர் யுவெல் ஸ்டென்ய்ண்ட்ஸ்.
“அல்-அஸாத் தனது பாதுகாப்பான அரண்மனையில் இருந்துகொண்டு சிலர் இஸ்ராயேலைத் தாக்குவதற்குத் திட்டமிடும் மைதானமாகச் சிரியாவை மாற்றுவதை நாங்கள் அனுமதிக்க இயலாது. அதன் விளைவு நாங்கள் அவரைச் சிரியாவின் தலைவராக இருக்க அனுமதிக்க முடியாது” என்கிறார் ஸ்டென்ய்ண்ட்ஸ்.
இந்த எச்சரிக்கை வரக் காரணம் ஓரிரு நாட்களுக்கு முன்பு ஈரானின் ஜனாதிபதியின் வெளிநாட்டுச் செயலகத்தின் ஒரு உயரதிகாரி “நாங்கள் சிரிய அரசின் வேண்டுகேளுக்கு இணங்கியே அந்த நாட்டில் எங்கள் இராணுவத்தை வைத்திருக்கிறோம். சிரியாவிலிருக்கும் எங்களது நண்பர்களின் மீது தாக்கும் ஸியோனிஸ்டுகளைத் தாக்க எங்களுக்கு சிரியா அனுமதி கொடுத்திருக்கிறது,” என்று அறிக்கை விட்டிருந்தது ஆகும்.
கடந்த வாரத்தில் சிரியாவில் விழுந்த ஏவுகணையொன்று சுமார் 25 இராணுவத்தினரைக் கொன்றது. அவர்களில் பெரும்பாலானோர் ஈரானியர்களே. அத்தாக்குதலை இதுவரை இஸ்ராயேல் தான் நடாத்தியதாக ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால், அதற்கும் முன்பு சில வாரங்களாகவே சிரியாவின் இராணுவத் தளங்களில் இஸ்ராயேல் தாக்கி அதைத் தாங்கள் செய்ததாக ஒத்துக்கொண்டிருக்கிறது.
சிரியாவில் ஈரானிய இராணுவத்தினர் தவிர, சிரியாவுக்கு ஆதரவான இஸ்ராயேலுக்கு எதிரிகளான ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் அல்-ஆஸாத் தரப்பில் போரில் ஈடுபட்டு வருகிறார்கள்.