ஆசியாவின் இணையத்தள வியாபாரத்தில் போட்டி

உலகின் மிகப்பெரிய விற்பனை நிறுவனமான வால்மார்ட் இணையத்தள வியாபாரத்தில்  கொடிகட்டிப் பறக்கும் அமெஸான் நிறுவனத்துடன் போட்டிபோட இந்திய நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் 75 விகிதமான பங்குகளை வாங்க முடிவுசெய்திருக்கிறது. விலை 15 பில்லியன் டொலர்கள். பிளிப்கார்ட் இந்தியாவின் மிகப் பெரிய இணையத்தள விற்பனையாளராகும்.

அமெஸான் நிறுவனம் போட்டியாக பிளிப்கார்ட்டின் 60 விகிதப் பங்குகளை வாங்கத் தயாரென்றும் அத்துடன் வால்மார்ட்டுடன் அவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நிறுத்தியதற்கான தண்டமான 2 பில்லியன் டொலர்களைத் தருவதாகவும் முன்வந்ததாகச் செய்திகள் வெளியாகின. அதைப் பற்றி அமெஸான் எக்கருத்தும் தெரிவிக்க மறுத்து வருகிறது. இந்திய இணையத் தளச் சந்தையில் அமெஸான் 30 விகிதத்தைக் கைப்பற்றியிருக்கிறது.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்குவதன் மூலம் சுமார் 3 பில்லியன் டொலர்களை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யவும் வால்மார்ட் திட்டமிட்டிருக்கிறது. 2007 இல் இரண்டு இந்தியப் பொறியிலலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பிளிப்கார்ட் 100 மில்லியன் இந்திய வாடிக்காளர்களைக் கொண்டது. அவர்கள் கையில் இந்தியாவின் 39 விகிதமான இணையத் தள வியாபாரம் இருக்கிறது.

சர்வதேச ரீதியில் பரவலாக வளர்ந்துகொண்டிருக்கும் இணையத் தள விற்பனையில் ஆசியச் சந்தையில் இறங்க வால்மார்ட் நீண்ட காலம் முயற்சித்துக்கொண்டிருந்தது. அதற்காக இந்தியாவின் பார்தி குரூப் நிறுவனத்துடன் செய்துகொள்ள முற்பட்ட ஒப்பந்தம் உள்ளே நடக்க முயற்சித்த லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களால் தடைபட்டது.

இந்தியச் சட்டப்படி வெளிநாட்டு நிறுவனங்கள் இப்படியான விற்பனையில் நேரடியாக முதலீடு செய்ய முடியாது. அதனால் வால்மார்ட் அச்சட்டங்களைச் சுற்றிவளைத்து எதிர்கொள்கிறது.

கூகுள் நிறுவனத்தின் தந்தை நிறுவனமான அல்பவேட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு ஜப்பானின் ஸொவ்ட்பாங்க் குரூப் நிறுவனத்திடம் இருக்கும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வெளிநாட்டுக் கடனை முழுவதுமாகப் பொறுப்பெடுக்கிறது. பெறுமதி 20 பில்லியன் டொலர்கள். அதன்பின்பு அங்கிருந்து வால்மார்ட் தனது பகுதியை இயக்கலாம்.

ஆசியாவின் இணையத் தள வியாபாரத்தில் முதலிடத்தில் நிற்பது சீனாவின் அலிபாபா நிறுவனமாகும். எவராலும் நெருங்கமுடியாத 10 பில்லியன் டொலர்கள் விற்பனையுடன் இருக்கும் அலிபாபா 2019 இல் மேலும் 60 விகிதம் தனது விற்பனையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் விரைவில் பொருளாதார வளர்ச்சியில் சீனாவைத் தாண்டிவிட இருக்கும் இந்தியாவில் பலமாகக் காலூன்றிவிடுவதன் மூலம் அமெஸான் வால்மார்ட் இரண்டுமே அலிபாபாவை வெற்றியெடுக்கும் எண்ணத்தில் செயற்படுகின்றன.

ஆனால் வால்மார்ட் நிறுவனத்தின் இந்திய நுழைவுக்கு எதிராகச் சிகப்புக்கொடி காட்டுகிறது ஸ்வதேசி ஜகரன் மன்ச் என்ற பா.ஜ.கட்சியின் மிக நெருங்கிய இயக்கம். குறிப்பிட்ட வியாபாரம் இந்திய அரசின் வெளிநாட்டு முதலீட்டுக் கோட்பாடுகளுக்கு எதிராக இருப்பதால் அது நடக்காமல் மோடி குறுக்கிட்டுச் செயற்படவேண்டும் என்று குரலெழுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *