சோள ஏற்றுமதியைத் தடை செய்கிறது ஆர்ஜென்ரீனா.
“இந்த முடிவு, பன்றி இறைச்சி, கோழி, முட்டை, பால் மற்றும் கால்நடைகள் போன்ற விலங்கு புரதங்களை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தும் துறைகளுக்கு தானிய விநியோகத்தை உறுதிசெய்வதன் அவசியத்தை அடிப்படையாகக் கொண்டது., ”என்று அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொரோனாக்காலத்தில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளால் உள்நாட்டின் தேவைக்கான அத்தியாவசிய உணவுப்பொருட்களை நிச்சயப்படுத்திக்கொள்ளவே உலகின் மூன்றாவது பெரிய சோளம் ஏற்றுமதி நாட்டின் அரசால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பெப்ரவரி மாதக் கடைசிவரை நீடிக்கும்.
அரசின் இந்த நடவடிக்கை நாட்டின் சோளத் தயாரிப்பாளர்களிடையே அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆர்ஜென்ரீனாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருளாக இருப்பது தானியங்களாகும். அவைகளின் ஏற்றுமதியை அரசு குறைக்குமானால் அது நாட்டுக்குக் கிடைக்கும் அன்னிய நாட்டுச் செலாவணியின் அளவைக் குறைத்து பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது. அதே நேரம் உள்நாட்டுத் தேவைக்காக மட்டுமே சோளம் விற்கப்படுமானால் விலைகள் குறையுமென்றும் பக்க விளைவாகத் தயாரிப்பையும் அது குறைக்குமென்றும் விவசாயிகளின் சங்கங்களும், கூட்டுறவுகளும் அஞ்சுகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்