ஜேர்மனியின் உளவுத்துறை நாட்டில் ஒரு புதிய தீவிரவாத அலையைப் பற்றி எச்சரிக்கிறது.
கொரோனாப் பரவலையடுத்து ஜேர்மனியின் பல பாகங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கானோர் வெவ்வேறு நகரங்களில் பேரணிகளை நடத்திவந்தார்கள். அவர்களிடையே பலவித காரணங்களுக்காகவும் எதிர்த்தவர்கள் சேர்ந்திருந்தார்கள்.
தற்போது அந்த எதிர்ப்பாளர்களின் மையப்பகுதியில் செயற்பட்டவர்கள் மென்மேலும் கடுமையான எதிர்ப்பாளர்களாகவும், தங்கள் நோக்குக்காகத் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடத் தயாராகிவருவதாகவும் தெரியவருகிறது. அவர்களிடையே கொரோனாத்தொற்றுக்கள் என்பது வெறும் கட்டுக்கதை என்ற நம்பிக்கையும், தடுப்பு மருந்து எதிர்ப்பும் அமெரிக்காவில் உருவாகிப் பரவியிருக்கும் QAnon அமைப்பின் நம்பிக்கைகளிலும் ஆழமாக வேரூன்றிவருவதாக ஜேர்மனியின் உளவுத்துறை தெரிவிக்கிறது.
கொ-எதிர்ப்பாளர்களிடையே இருக்கும் அக்குழுவினர் தீவிரவாதத்தைக் கையிலெடுக்கக்கூடிய வகையில் வேகமாக வளர்ந்து வருவதாக எச்சரிக்கப்படுகிறது. மிக விரைவில் அவர்கள் ஏதாவது தீவிரவாதச் செயல்களை நிறைவேற்றும் எண்ணம் கொண்டு செயற்பட்டு வருவதாக ஜேர்மனியின் உளவுத்துறை வெளிப்படுத்தியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்