ஜேர்மனியின் பெரும்பாலான மருத்துவமனைகள் வரும் வருடத்தில் திவாலாகும் நிலைமை.

பல வருடங்களாகவே படிப்படியாகத் தமது பொருளாதார நிலைமையில் பலவீனமாகி வந்திருக்கும் ஜேர்மனியின் மருத்துவமனைகள் பெரும்பாலானவை அடுத்த வருடத்தில் திவாலாகும் நிலைமையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜேர்மனிய மருத்துவமனைகளின் கூட்டமைப்பு தனது அங்கத்துவ மருத்துவமனைகளிடையே நடத்திய கணிப்பீட்டிலிருந்து நாட்டின் சுமார் 60 % மருத்துவமனைகள் திவாலாகக்கூடிய பொருளாதார நிலைமையை அடைந்திருப்பதாகத் தெரியவருகிறது.

ஜேர்மனியின் சிறிய நகரங்களிலிருக்கும் மருத்துவமனைகளே பெரும்பாலும் தமக்குத் தேவையான பொருளாதார பலமில்லாமையால் கடன்களை வாங்கி இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவைகளுக்கு அரசு உடனடியாகப் பொருளாதார உதவிகளைக் கொடுக்காவிடில் அவைகளை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார் நாட்டு மருத்துவமனைகளின் மத்திய அமைப்பின் நிர்வாகி.

மருத்துவமனைகளின் இந்த நிலைமைக்குக் காரணம் மருந்துகள், சேவைகளின் விலைகள் வேகமாக அதிகரித்திருப்பது மட்டுமன்றித் தேவையான அளவு மருத்துவ சேவை ஊழியர்கள் இல்லாமையும் ஆகும். ஊழியர்கள் போதாத சமயத்தில் அதிக செலவில் அவசர தேவைக்கான ஊழியர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டு வருகிறார்களென்றும் அது செலவைப் படுவேகமாக உயர்த்துவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஜேர்மனிய அரசு இதுவரை மருத்துவமனைகளுக்குக் கொடுத்துவரும் நிதியுதவியும் நியாயமான முறையில் பகிரப்படவில்லை என்பதும் ஒரு காரணம் என்கிறார் மக்கள் ஆரோக்கிய அமைச்சர். எனவே அரசு தான் மருத்துவமனைகளுக்கு வழங்கும் நிதியை எப்படியான முறையில் கொடுப்பது என்பது பற்றிய முடிவுகளில் மாற்றங்களைக் கொண்டுவந்து சிறிய நகர மருத்துவமனைகளும் செயற்படும்வகையில் உதவவிருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

நிதியமைச்சர் குறிப்பிடும் மாற்றங்கள் எப்போ அமுலுக்கு வருமென்று தெரியாத நிலையில் அவைகள் மருத்துவமனைகளுக்கு உதவப்போவதில்லை என்கிறார்கள் அரசின் நடவடிக்கையில் மெத்தனம் இருப்பதாக விமர்சிப்பவர்கள். ஜேர்மனிய மருத்துவமனைகளின் இயக்கத்தில் பெரும் மாறுதல்களைக் கொண்டுவந்து பல சிறிய மருத்துவமனைகளை மூடிவிட்டுப் பெரிய மருத்துவமனைகளிலேயே எல்லோருக்கும் சேவை கொடுக்கும் நிலைமையை உண்டாக்குவதே நிலைமையை எதிர்கொள்ள உதவும் என்கிறார்கள் அவர்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *