பங்களாதேஷ் அகதிகள் முகாம்களிலிருந்து தப்பியோடி வரும் ரோஹின்யா அகதிகள்.

இந்தோனேசியாவின் அச் மாநிலத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மிகவும் பலவீனமான நிலையில் சுமார் 180 ரோஹின்யா அகதிகள் வந்திறங்கியிருப்பதாக அந்த நாட்டின் அரசு தெரிவிக்கிறது. சிறிய அந்தக் கப்பலின் இயந்திரம் பழுதாகிவிட்டதால் கடலில் அலைக்கழிக்கப்பட்ட பின்னர் 32 குழந்தைகளுடனான அது கரைதட்டியிருக்கிறது. வழியில் 20 பேர் ஏற்கனவே இறந்திருப்பதாக அதில் பயணித்தவர்கள் தெரிவித்தனர். பல நாட்கள் உணவு, நீரின்றித் தவித்த நிலையில் வந்த படகை அப்பகுதி மீனவர்கள் கண்டு உதவினர். 

கரைதட்டிய அந்தப் படகிலிருந்தவர்கள் பங்களாதேஷ் அகதிகள் முகாம்களிலிருந்து வெளியேறி மலேசியாவை நோக்கிப் பயணித்தவர்கள் என்று அறியப்படுகிறது. பங்களாதேஷ் அகதிகள் முகாமில் மோசமான வாழ்க்கை நிலையே இருப்பதால் அங்கிருந்து அவர்கள் தப்பியோடியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மியான்மாரிலிருந்து அந்த அரசு, இராணுவம் ஆகியவற்றின் திட்டமிட்ட இன ஒழிப்பிலிருந்து தப்பியோடிய ரோஹின்யா இன அகதிகள் பங்களாதேஷில் பெருமளவில் தஞ்சமடைந்தார்கள். அங்கேயும் அவர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் மிக மோசமான வசதிகளுடன் வாழ அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வாழும் முகாம்களில் போதை மருந்து வியாபாரம், விபச்சாரம், கொள்ளைகள், குரோதக் கொலைகள் ஆகியவை மலிவாகியிருப்பதாகச் சமீப காலத்தில் பல செய்திகள் வெளியாகியிருந்தன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *