ஜேர்மனியின் பியர் தயாரிப்பாளர்களையும் கொரோனாக்காலம் வறட்டுகிறது.

 ஜேர்மனியின் பியர்ப் பாரம்பரியத்தின் சின்னம் என்று குறிப்பிடப்படும் பம்பெர்க் [Bamberg] நகரத்தின் தற்போதைய வெறுமையான வீதிகள் நாட்டின் பியர்த் தயாரிப்பாளர்களின் நிலைமையைப் பிரதிபலிக்கிறது. இரண்டாம் தடவையாக முதல் தடவையிலும் கடுமையான கட்டுப்பாடுகளால் நகரம் மௌனமாகியிருக்கிறது. குளிர்காலத்திலும் பரபரப்பாக இருக்கும் நகரின் தவறணைகள் சில நூறாண்டுகளுக்கும் பழமையானவை. தமது தவறணைகள் முதலாம், இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் கூட இப்படியாக மூடப்பட்டிருக்கவில்லை என்கிறார்கள் அவர்கள்.

ஜேர்மனி முழுவது மதுக்கடைகள், தவறணைகள், உணவகங்கள் மூடப்பட்டிருக்கின்றன. அதனால் தயாரிக்கப்பட்ட பியர்ப் பீப்பாய்கள் விற்கப்படாமல் போகவே தயாரிப்பும் ஸ்தம்பித்திருக்கிறது. பியர் தயாரிப்பாளர்களின் தேசிய அமைப்பு இந்த நிலைமை நீடித்தால் பல பியர்த் தயாரிப்பு நிறுவனங்கள் நிரந்தரமாகக் கதவுகளை மூடிக்கொள்ளும் நிலைமை நீண்ட தூரத்திலில்லை என்று எச்சரிக்கிறது.

தவறணை, உணவுச்சாலை விற்பனைகள் படுத்துவிட்டாலும் பியரைத் தொடர்ந்தும் ஓரளவாவது விற்க முடிவதற்கான காரணம் ஏற்றுமதியாகும். அதையும் விட முக்கியமாக இணையத்தளங்களில் செய்யப்படும் விற்பனை சமீப காலத்தில் எதிர்பாராதவிதமாக உயர்ந்திருக்கிறது என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *