ஸக்கி உர் ரெஹ்மான் லக்வியைப் பாகிஸ்தான் கைது செய்தது.

2008 இல் இந்தியாவில் நடாத்தப்பட்ட தீவிரவாதச் சங்கிலித் தாக்குதல்களுக்குப் பின்னணியிலிருந்த அதி முக்கிய புள்ளியான ஸக்கி உர் ரெஹ்மான் லக்வியைக் கைது செய்திருப்பதாகப் பாகிஸ்தான் அரசு அறிவிக்கிறது. 

பாகிஸ்தானைச் சேர்ந்த லக்க்ஷார் எ தைபா இயக்கத்தினரால் நடத்தப்பட்ட இந்தக் கோரத் தாக்குதலில் பத்துப் பேர் ஈடுபட்டனர். மும்பாயின் சிறு துறைமுகமொன்றில் களவாக வந்திறங்கிய இவர்கள் மூன்று பகுதிகளாகப் பிரிந்து மும்பாய் தாஜ் ஹோட்டல் உட்படப் பல கட்டடங்களில் இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டுத் தள்ளியதில் 166 பேர் இறந்து மற்றும் பல காயமடைந்தார்கள். தாக்குதலில் ஈடுபட்ட ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட மிச்சமிருந்த ஒருவனைப் பொலீஸ் கைது செய்து விசாரித்தது. அவனுக்கு 2012 இல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் ஸக்கி உர் ரெஹ்மான் லக்வி மும்பாய்த் தாக்குதலுக்கான திட்டங்களை வகுத்துக் கொடுத்தவன் என்று குறிப்பிட்டு இந்தியாவும், அமெரிக்காவும் அவனைக் கைது செய்யும்படி பாகிஸ்தானை நீண்ட காலமாகக் கோரி வந்தன.

இவன் இந்தியாவைத் தவிர பொஸ்னியா, செச்னியா, ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளிலும் தீவிரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்கான திட்டங்களையும் ஒழுங்குகளையும் செய்தவன் என்று ஐ. நாடுகள் சபையின் பாதுகாப்பு அமைப்பு மூலமாகவும் தேடப்பட்டு வந்தவன்.

பாகிஸ்தானில் ஒரு மருத்துவக் கடையை நிர்வகித்து அதன் மூலமாகத் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவிவந்ததால் அவனைக் கைப்பற்றியிருப்பதாகப் பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது.

இவனைத் தவிர பாகிஸ்தானில் வாழும் ஹபீஸ் சாயீட் என்ற இன்னொரு  இயக்கத் தலைவனும் மும்பாய் தாக்குதல்களில் ஈடுபட்டதாக இந்தியா சுட்டிக்காட்டி வருகிறது. அவனைக் காட்டிக் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் டொலர்கள் சன்மானம் கொடுப்பதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.

ஸக்கி உர் ரெஹ்மான் லக்வி 2008 இல் கைது செய்யப்பட்டு இந்தியாவால் அவன் குற்றவாளி என்று ஆதாரங்கள் கொடுக்க முடியாததாகக் குறிப்பிட்டு விடுதலை செய்யப்பட்டான். ஹபீஸ் சாயிட் கடந்த வருடம் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறான்.

இவனை இப்போது கைது செய்யக் காரணம் Financial Action Task Force என்றழைக்கப்படும் உலகில் தீவிரவாத அமைப்புக்களுக்கு நிதியுதவி செய்வதில் ஈடுபடும் நாடுகள் பற்றிய எச்சரிப்பு அமைப்பின் கூட்டங்கள் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் நடக்கவிருப்பதே என்று குறிப்பிடப்படுகிறது. அந்தக் சாம்பல் பட்டியலில் இருக்கும் நாடுகளிலொன்றான பாகிஸ்தான் அந்த அமைப்பின் கூட்டங்கள் நடக்கமுன்னர் இவர்களைக் கைது செய்வதும் பின்னர் வெளியே விடுவதும் ஏற்கனவே நடந்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *