தனது கையைச் சுற்றிப் படர்ந்த நாகபாம்பைக் கடித்துக் கொன்றான் எட்டு வயதுப் பையன்.

இந்தியாவின் சத்திஸ்கர் மாநிலத்திலிருக்கும் பண்டர்பாத் கிராமத்தில் தனது வீட்டுக்கருகில் விளையாடிக்.கொண்டிருந்த தீபக் என்ற எட்டு வயதுச் சிறுவனைப் பாம்பு கடித்தது. தனது கையில் ஏறிச் சுற்றிக் கடித்த பாம்பை உதறியும் அது விழாமல் போகவே பதிலுக்கு அதைக் கடித்துத் தள்ளினான் தீபக். அவனது கடிகளால் பாம்பு கீழே விழுந்து இறந்தது.

உடனடியாகப் பையனை நகரிலிருந்து மருத்துவசாலைக்குப் பெற்றோர் கொண்டு சென்றனர். அவனுக்கு அங்கே உடனடியாக நஞ்சு பரவுதைத் தடுக்கும் மருந்து கொடுத்து நாள் முழுவதும் கவனிப்பில் வைத்திருந்தார்கள். பாம்பு கடித்தும் அவனது உடலுக்குள் அது நஞ்சைப் பரப்பவில்லை என்பது பின்னர் தெரியவந்தது. அப்படியான பாம்புக்கடி பெரும் வேதனையைத் தரும் என்று மருத்துவர் குறிப்பிட்டார்.

பாம்புகளின் தங்குமிடம் என்று அழைக்கப்படுகிறது அந்தப் பையன் வாழும் பிராந்தியம். ஆயினும் பாம்பைக் கடித்துக் கொன்ற சம்பவம் இதுவரை தான் அறிந்திருக்கவில்லை என்று உள்ளூர் பத்திரிகையில் தெரிவித்திருக்கிறார் மருத்துவர். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *