நோர்வே மண்சரிவில் காணாமல் போன 10 பேரில் 3 பேர் இடிபாடுகளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டார்கள்.
சில நாட்களுக்கு முன்னர் நோர்வேயின் கியேட்ரும் நகரில் நிலத்தரை அப்பிராந்தியத்தில் நீண்டகாலமாகப் பெய்துவந்த பனிகலந்த மழையால் ஈரமாகி பல வீடுகளுடன் நிலத்தினுள் புதைந்துவிட்டது பற்றிக் குறிப்பிட்டிருந்தோம்.
அங்கே வசித்துவந்தவர்களில் சுமார் 1,500 பேரளவில் வேறிடங்களுக்கு மாற்றிவிட்டுக் காணாமல் போனவர்களின் விபரங்களைத் தெரிந்துகொண்டு நடந்துவந்த தேடுதல் வேட்டை இன்னும் முடியவில்லை. ஹெலிகொப்டர்கள், காற்றாடி விமானங்கள், வெம்மையைக் கண்டறியும் கமராக்கள் போன்ற நவீன கருவிகளைப் பாவித்து அத்தேடுதல் நடந்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன் பலனாக சமீப மணித்தியாலங்களில் ஒவ்வொருவராக இதுவரை மூன்று பேர் இறந்த நிலையில் இடிபாடுகளிடையே கண்டுபிடிக்கப்பட்டதாக பொலீசார் தெரிவித்திருக்கின்றனர். காப்பாற்றும் முயற்சியில் ஒருவேளை யாரையாவது உயிருடன் மீட்கலாம் என்றே இன்னும் நம்ப்பப்படுகிறது. ஆனால் நடாத்தப்படும் தேடுதல், காப்பாற்றல் வேலைகள் மிகவும் ஆபத்தானவை என்று குறிப்பிடப்படுகிறது. அங்கிருக்கும் சேற்றுக்களிமண் புதைகுழியாகும் வகையானது என்பதால் திடீரென்று நகர ஆரம்பிக்கலாமென்று குறிப்பிடுகிறார்கள்.
1800 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முதலாக இப்படியொரு மோசமான மண்சரிவு ஏற்பட்டதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் நலன்கருதி இறந்தவர்கள் காணாமலிருப்பவர்களின் வயது, ஆணா பெண்ணா போன்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்