ஜேர்மனியின் தலைவர் அஞ்சலா மெர்க்கல் தனது கடைசி புதுவருட வாழ்த்தை நாட்டவருக்குத் தெரிவித்தார்.
2005 இல் ஜேர்மனியின் முதலாவது பெண் தலைவராகி, ஐரோப்பாவெங்கும் பெரும் மதிப்புப் பெற்றது மட்டுமன்றி கடந்த சில வருடங்களாகவே உலகின் கௌரவமிக்க, பலமான ஒரு அரசியல்வாதி என்ற பெயரைப் பெற்றவர் அஞ்சலா மெர்க்கல். 2021 கடைசிப் பகுதியில் நடக்கப்போகும் தேர்தலின் பின்னர் தான் பதவிக்குப் போட்டியிடமாட்டேனென்று அவர் 2018 லேயே அறிவித்துவிட்டார்.
புதுவருட தினத்தன்று தனது பதினைந்தாவதும் கடையானதுமான புதுவருடச் செய்தியையும், வாழ்த்துக்களையும் ஜேர்மன் மக்களுக்கு அவர் வழங்கினார். எதிர்பார்த்தது போலவே கொரோனாக்காலம், தடுப்பு மருந்து, விநியோகம், அதுபற்றிய விமர்சனங்கள் பற்றியும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.
உலகின் பல நாடுகளாலும் முதல் முதலில் அங்கீகரிக்கப்பட்ட Pfizers/Biontech நிறுவனம் ஜெர்மனியில் ஆராய்ச்சி செய்து தயாரித்த மருந்து உறுதிகூறப்பட்டதுபோல ஜேர்மனியின் மாநிலங்களுக்குக் குறிப்பிட்ட சமயத்தில் கிடைக்கவில்லை என்பது மெர்க்கலுக்கு எதிராகச் சமீபத்தில் ஜெர்மனிக்குள் எழுந்திருக்கும் விமர்சனமாகும்.
ஜெர்மனியால் பகுதி முதலீடு செய்யப்பட்டு ஜெர்மனிய நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து ஏன் நாட்டு மக்களுக்கு முதலில் கிடைக்கவில்லை?
ஐரோப்பிய ஒன்றியமும் அந்த நிறுவனத்தின் தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்கு உதவியிருந்து எதற்காக ஒன்றியத்தை [300 மில்லியன்] விட இரண்டு மடங்கு மருந்துகளை அமெரிக்கா [600 மில்லியன்] பெற்றது?
ஜெர்மனியால் 78,000 மட்டுமே மருந்துகளைச் செலுத்த முடிந்த சமயத்தில் இஸ்ராயேலால் எப்படி 640,000 பேருக்குத் தடுப்பு மருந்துகளைக் கொடுக்க முடிந்தது?
மேற்கண்ட கேள்விகளால் மெர்க்கலை அவரது கூட்டணிக் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் தாக்கி வருகின்றன. அவர் Pfizers/Biontech நிறுவனம் தனது தடுப்பு மருந்துத் தயாரிப்பை வேறு நிறுவனங்களிடமும் கொடுத்து மிக வேகமாக ஜெர்மனியர்களுக்குத் தேவையான தடுப்பு மருந்துகளைத் தரக் கோரும்படி அவர்கள் மெர்க்கலை நெருக்கி வருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்