பர்ஸலோனா விமான நிலையத்திலிருந்து திருப்பியனுப்பட்ட பிரிட்டர்கள்!
பிரிட்டனின் குடியுரிமை கொண்ட (NIE) அடையாள அட்டைகளுடன் மாத்திரம் ஸ்பெயினுக்குப் பயணித்த பிரிட்டர்களை நாட்டுக்குள் விடாமல் திருப்பியனுப்பிய சம்பவம் ஞாயிறன்று பர்ஸலோனா விமான நிலையத்தில் நடந்திருக்கிறது.
லண்டன் ஹீத்ரோவிலிருந்து புறப்பட்ட விமானம் சுற்றுப்பயணிகளுடன் பர்ஸலோனாவுக்கு வந்தவுடன் பிரிட்டிஷ் பயணிகளெல்லோரும் தனியாகப் பிரிக்கப்பட்டார்கள். ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியேயிருந்து வந்ததால் அவர்களுடைய பயணச்சீட்டுக்களைக் காட்டும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். அவர்கள் எல்லோரிடமும் அவரவர் குடியுரிமை அடையாள அட்டை, கொரோனாத்தொற்று இல்லையென்று காட்டும் சான்றிதழ் மற்றும் ஸ்பானியப் பயணக் காப்புறுதிகள் இருந்தன.
ஆனாலும், ‘ஜனவரி முதலாம் திகதியிலிருந்து பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து விட்டதால் அவர்கள் முன்னரைப்போல வெறும் குடியுரிமை அடையாள அட்டையுடன் அந்த நாட்டுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்,’ என்ற காரணம் குறிப்பிடப்பட்டாலும் ஸ்பெயின் பிரிட்டர்களுக்கான தனது பயண ஆலோசனைகள் பற்றிய இணையத்தளத்தில் அவர்கள் பிரெக்ஸிட்டுக்கு முன்னரைப் போலவே தொடர்ந்தும் தமது நாட்டுக் குடியுரிமைப் பத்திரத்துடன் ஸ்பெயினுக்குள் வரலாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதையே லண்டனிலிருக்கும் ஸ்பானியத் தூதுவராலயமும் உறுதிசெய்திருக்கிறது என்பதால் அவர்களிடையே மிகவும் குழப்பமேற்பட்டது.
அதே விமானத்தில் பயணித்த போர்த்துக்கல் – பிரிட்டிஷ் இரட்டைக் குடிமகனும் முதலில் உள்ளே நுழைய மறுக்கப்பட்டுக் கடைசி நிமிடத்தில் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டார். பயணிகளில் ஒருவரான பிரபல பத்திரிகையாளர் உட்பட மற்றவர்களும் இதுபற்றிச் சமூக வலைத்தளங்களில் அங்கிருந்த ஸ்பானிய விமான நிலைய அதிகாரிகளைக் கடுமையாக விமர்சித்து விளக்கம் கேட்டிருக்கிறார்கள்.
இந்த விமானப் பயணத்தில் பயணித்த எல்லோரையும் லண்டனில் ஏற்றியபோது அவர்களுடைய அடையாளப் பத்திரங்கள் பரிசீலைக்கப்பட்ட பின்னரே பயணிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலுமொரு ஸ்பானிய விமானப் பயணச் சம்பவத்தில் விமானத்தில் ஏறும்போது பிரிட்டிஷ் குடியுரிமைப் பத்திரங்களை மட்டுமே வைத்திருந்தவர்களை ஏற்றிக்கொள்ள மறுத்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்