குடியேற்றம் சம்பந்தமான அமைச்சராக இருந்த டென்மார்க்கின் பெண் அரசியல்வாதி கட்சித் தலைமையிலிருந்து விலகினார்.
சில வருடங்களுக்கு முன்னர் தனது கட்சிக்குள் மிகவும் பிரபலமாக இருந்து நாட்டின் குடியேற்றவாதிகள் பற்றிய அமைச்சராக இருந்த இங்கர் ஸ்டோய்பெர்க் 2016 இல் தனது முடிவுகளில் செய்த தவறொன்று அவரைப் பதவியிலிருந்து விலக்கியதுமன்றி, கட்சியின் உப தலைமையிலிருக்கும் வீழ்த்தியிருக்கிறது.
டென்மார்க்குக்கு வரும் அகதிகளைக் கடுமையாகக் குறைப்பது பற்றிய இங்கரின் நடவடிக்கைகள் சில வருடங்களுக்கு முன்னர் இங்கருக்கும் அவரது கட்சிக்கும் நாட்டில் ஓரளவு முன்னேற்றத்தைக் கொடுத்து வந்தது. அதனால் குடியேற்ற அமைச்சர் பதவியை அடைந்த இங்கர் 2016 இல் டென்மார்க்கில் வாழும் திருமணமான அகதிகளில் 18 வயதுக்குக் குறைந்தவர் ஒருவரி இருப்பின் அந்தத் தம்பதிகளைத் தனியாகப் பிரிக்கவேண்டும் என்ற முடிவை எடுத்து நடைமுறைப்படுத்தினார். இம்முடிவு டனிஷ் சட்டங்களுக்கு முரணானது என்று தெரியவரவே இங்கர் தனது பதவியை இழக்கவேண்டியதாயிற்று.
அதைத் தொடர்ந்து நாட்டின் சட்டத்துக்கெதிரான முடிவை எடுத்துப் பாராளுமன்றத்தையும் ஏமாற்றியதாகக் குறிப்பிட்டு அவர் மீது விசாரணை நடாத்தப்பட்டுக் கடந்த வருட இறுதியில் அரசு அவர்மீது குற்றஞ்சாட்டி நீதிமன்றத்துக்கும் போகப்போவதாக அறிவித்தது. அச்சமயத்தில் இங்கர் தனது கட்சியின் உப தலைவராகவும் ஆகியிருந்தார்.
அதையடுத்து அவரது கட்சிக்காரர்களும் அவரை உச்ச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்காக அரசு எடுக்கப்போகும் முடிவை ஆதரிப்பதாகக் குறிப்பிடவே வேறு வழியின்றி இங்கரின் கட்சித் தலைவர் அவரைப் உப தலைவர் பதவியிலிருந்து விலகும்படி கோரவே அவர் அந்த முடிவை எடுத்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்