உலகின் 20 வது பணக்காரர் ஜக் மா என்ன ஆனார்?
சுமார் 50 பில்லியன் டொலர் சொத்துக்களைக்கொண்ட சீனாவின் இரண்டாவது பணக்காரர் ஜக் மா உலகின் மிகப்பெரிய இணையத்தளமான அலிபாபா மற்றும் முதலீட்டு வங்கி அன்ட் ஆகியவற்றின் சொந்தக்காரர் என்னானார் என்ற கேள்விக்கு விடை எவருக்கும் தெரியவில்லை.
ஒக்டோபர் மாதம் ஆசிரியர்கள் மாநாடொன்றில் பங்குபற்றிய ஜக் மா சீன அரசு நாட்டின் பொருளாதார, சமூக அமைப்புக்களில் மாற்றங்கள் செய்யவேண்டுமென்று விமர்சித்துப் பேசினார். இயந்திரமயமாக்கல் யுகத்தின் பொருளாதார அமைப்புக்களே இன்னும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இவைகளின் காலம் கடந்துவிட்டது. மாறிவரும் காலத்துக்கேற்ற பொருளாதாரக் கோட்பாடுகளை அரசு அறிமுகப்படுத்தவேண்டும். எதிர்காலச் சமூகத்துக்கு ஏற்றபடியாக எல்லாமே மாற்றியமைக்கப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
நவம்பர் மாதமளவில் ஜக் மாவின் நிறுவனங்களின் செயற்பாடுகளைப் பற்றி விமர்சித்த சீன அரசு அவைகளின் அமைப்புக்களை ஆராய்ந்தபின் அவைகளின் அமைப்புக்களில் மாறுதல்கள் கொண்டுவரப்படவேண்டும் என்று சுட்டிக்காட்டியிருந்தது.
சாதாரணமாகப் பல நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றும், பத்திரிகையாளர்களுடன் தொடர்புகளை வைத்திருக்கும் அச்சமயத்திலிருந்தே ஜக் மாவின் அசுமாத்தமெதுவும் இல்லாமல் போய்விட்டது. நவம்பர் மாதத்தில் நடாத்தப்படும் நிறுவனங்கள் பற்றிய ஒரு முக்கிய வைபவத்தில் கலந்துகொள்ளும் முக்கிய நபராக அறிவிக்கப்பட்டிருந்த ஜக் மா அதில் பங்குபற்றாமல் அலிபாபா நிறுவன உயரதிகாரி ஒருவரே பதிலாகத் தோன்றினார்.
அதன் பின்பு அவர் என்னானார் என்பது பற்றிய பல ஆருடங்கள் பல கோணங்களிலிருந்தும் வெளிவந்தாலும் பதில்கள் எங்கிருந்தும் வரவில்லை. நாட்டின் உயர்மட்டத்திற்கு ஏறிவிட்டுச் சீன அரசை விமர்சிப்பவர்களுக்குச் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி கடிவாளம் கட்டிவிடுவது வழக்கமென்பது பல தடவைகளிலும் உண்மையாகிய விடயமே. இவருக்கு முன்னரே வேறு சீனத் தனவந்தர்களும் திடீரென்று காணாமல் போவதும், குறிப்பிட்ட காலத்தின் பின்னர் “குறிப்பிட்ட நபர் இன்னோரன்ன குற்றங்களுக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாகி வருகிறார்,” என்று சீனாவின் அரசால் வெளிப்படுத்தப்படுவதும் அதிசயமல்ல.
வேகமாக முன்னேறிச் சீனாவின் பெரும் பணக்காரர்களாகி அதன் பின்னர் கைது செய்யப்பட்டுச் சிறையிலிருப்பவர்களுக்கு உதாரணமாக Zhou Zengyi, Xu Ming, Gong Aiai ஆகியவர்களைக் குறிப்பிடலாம். சீனாவின் பொருளாதாரம் கடந்த கால் நூற்றாண்டாகப் படு வேகமாக வளர்ந்து வரும் சமயத்தில் சட்டங்களுக்குள் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தில் பல வேகமாகப் பணக்காரர்களாகி அரசின் கண்ணில் ஏதாவது ஒரு தவறுக்காகச் சிக்கிக் கொள்வதும் அதன் விளைவாக அவர்களது பல தில்லுமுல்லுகளும் வெளிவருவதுமே இப்படிப்பட்ட காணாமல் போதல், கைதாகல், சிறைவாசம் போன்றவைக்குக் காரணமென்று சில பொருளாதார விற்பன்னர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்